Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆந்திராவில் கோர விபத்து.. அதிவேகமாக மோதிய கார்.. 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் 2025, ஏப்ரல் 30 அன்று நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். மும்பையில் இருந்து நிகழ்ச்சிக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஆந்திராவில் கோர விபத்து.. அதிவேகமாக மோதிய கார்.. 6 பேர் உயிரிழப்பு
கார் விபத்து
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Apr 2025 19:20 PM

ஆந்திரப்பிரதேசம், ஏப்ரல் 30: ஆந்திரப்பிரதேசத்தில் (Andhra Pradesh) நடைபெற்ற சாலை விபத்தில் (Car Accident) 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் (Nellore District) இந்த கோர சாலை விபத்தானது நிகழ்ந்துள்ளது. நெல்லூரில் உள்ள புச்சிரெட்டிபாலத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவுக்கு மும்பையில் இருந்து இளைஞர்கள் ஒரு காரில் வந்துள்ளனர். இவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இன்று மும்பைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லூர் மாவட்டம் கோவூர் மண்டலத்தில் உள்ள போதிரெடிபாலம் அருகே ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகத்தில் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் ஐந்து பேர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. வீட்டின் மீது மோதியதில் அங்கிருந்த ஒருவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கான காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் நெல்லூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் இறந்தவர்கள் அனைவரும் நாராயணா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நரேஷ், அபிஷேக், ஜீவன், யக்னேஷ் மற்றும் அபிசாய் என ஆகியோர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் காரில் வந்த நவ்நீத் என்ற மாணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் கார் மோதிய வீட்டில் இருந்த ராமனையா என்ற நபரும் பலியானார்.

காரை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். விபத்துக்குள்ளான காரானது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இன்று (ஏப்ரல் 30, 2025) ஆந்திராவில் சிம்மாசலத்தில் புதிதாக கட்டப்பட்ட நரசிம்ம கோயிலில் அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.