73 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் அதிகளவு வாக்குப்பதிவு.. SIR-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் பெருமிதம்!!

Historic turnout in bihar: பீகாரில் 73 ஆண்டுகளுக்கு பிறகு அதிகளவில் வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. இது வெளிப்படையான மற்றும் அர்ப்பணிப்புள்ள தேர்தல் இயந்திரங்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் பெருமிதம் கூறியுள்ளார்.

73 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் அதிகளவு வாக்குப்பதிவு.. SIR-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் பெருமிதம்!!

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்.

Updated On: 

07 Nov 2025 10:59 AM

 IST

பீகார், நவம்பர் 07: பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவும் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில், 1951ம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவில் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக கூறிய அவர், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைச் சரிசெய்து, துல்லியமான வாக்குப்பதிவுகளை உறுதி செய்ய SIR உதவியதாக தெரிவித்துள்ளார். பீகாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக அங்கு மொத்தம், 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில், 36,733 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளவை ஆகும்.

அதிகளவில் வாக்குப்பதிவு:

பெரும்பாலான தொகுதிகளில், காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வழக்கத்தைவிட, இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை 60.18% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், கடைசி நேரத்திலும் பலர் காத்திருந்து வாக்களித்தனர். இதனால், முதற்கட்ட தேர்தலில் 64.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் 73 ஆண்டுகளுக்கு பின் அதிகளவு வாக்குப்பதிவு இம்முறை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறும்போது, பீகார் மாநிலம் ஓட்டுமொத்த தேசத்திற்கே வழிகாட்டியுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எந்தவித மேல்முறையீடும் இல்லாமல் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களுடன், அதிக வாக்குப்பதிவுடன் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுதேர்தல் ஆணையத்தின் மிகப்பெரும் அற்புதமான பயணமாகும் என்றும் கூறியுள்ளார்.

வாக்காளர்கள் குழப்பம்:

தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒரு வாக்குச் சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கையை 1,500 லிருந்து 1,200 ஆகக் குறைத்து, மாநிலம் முழுவதும் வாக்குச் சாவடிகளின் வலையமைப்பை விரிவுபடுத்தியது. இந்த மாற்றத்தின் மூலம், கூட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடிந்தாலும், வாக்குச் சாவடிகள் மாறிய சில வாக்காளர்களிடையே சில குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக ஒரே வாக்குச்சாவடியில் வாக்குச்செலுத்தியவர்களின் பெயர்கள் இத்தேர்தலில் மாற்றி இடம்பெற்றிருந்தது. இதனால், SIR மூலம் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக நினைத்து பலர் அச்சம் கொண்டனர். எனினும், வேறு வாக்குச்சாவடிகளில் அவர்கள் பெயர் இருந்ததைக் கண்டு ஆறுதல் அடைந்தனர்.

இதையும் படிக்க: Rahul Gandhi: ஹரியானா தேர்தலில் பிரேசில் மாடல் பெயர் எப்படி..? தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி

65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்:

முன்னதாக, பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தன. இவர்களில் 22 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர் அல்லது முகவரியில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் 7 லட்சம் வாக்காளர்களின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.