உண்மையான தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் – இல. கணேசன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..

La Ganesan Demise: நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல கணேசன் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உண்மையான தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் - இல. கணேசன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Aug 2025 21:53 PM

இல. கணேசன் மறைவு, ஆகஸ்ட் 15, 2025: நாகாலாந்து ஆளுநரும் பாஜகவின் மூத்த தலைவருமான இல கணேசன், உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 15 2025 தேதியான இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 80 ஆகும். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல கணேசன், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுக்கும் பொழுது வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாஜகவின் அடையாளமாக திகழ்ந்தவர் இல கணேசன். பாஜகவை தமிழகத்தில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியவர்.

பிரதமர் மோடி இரங்கல்:


இல கணேசனின் மறைவு அரசியல் களத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இல கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ தேச சேவைக்கும் தேசத்தை சிறப்பாக கட்டமைக்கவும் நமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசிய வாரியாக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

முழு வாழ்க்கையை தேச சேவைக்காக அர்ப்பணித்த தலைவர் – வெங்கையா நாயுடு:


அதேபோல் முன்னாள் துணை ஜனாதிபதி ஆன வெங்கையா நாயுடு தனது வலைதள பக்கத்தில், “ அர்ப்பணிப்பு உள்ள தேசபக்தர், சொற்பொழிவாளர் மற்றும் தனது முழு வாழ்க்கையை தேச சேவைக்காக அர்ப்பணித்த தலைவர். அவர் தனது எளிமை பணிவு மற்றும் பொது நலனுக்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் எண்ணற்ற மக்களை ஊக்கப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சியில் பல ஆண்டுகள் பணியாற்றியது முதல், மணிப்பூர் மேற்குவங்கம் மற்றும் நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றியது வரை பொது வாழ்வில் அவர் ஆற்றிய பல ஆண்டுகால தன்னலமற்ற பணிகள் மிகுந்த மரியாதை உடன் நன்றியுடன் நினைவு கூரத்ப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்:


அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கட்சி அமைப்பை கட்டி எழுப்புவதே அவரது பலம். தனது இறுதி மூச்சு வரை அர்ப்பணிப்புள்ள காரிய கர்த்தாவாகவும், சுயசேவகராகவும் இருந்தார்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அஞ்சலி:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இல கணேசன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். திரு. இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.