இன்று கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்..
Parliament Budget session to begin today: பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 9வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புப் புகைப்படம்
டெல்லி, ஜனவரி 28: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க : பட்ஜெட் 2026: பழைய மற்றும் புதிய வரி விதி முறை.. சம்பளம் பெறுவோர் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில சட்டமன்றங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பதட்டமான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. முதல் நாளான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிப்.1ம் தேதி பட்ஜெட் தாக்கல்:
பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 9வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு, இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சிகள் அதிருப்தி:
எதிர்க்கட்சிகள் சார்பில், ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (திமுக), சாகரிகா கோஷ் (திரிணாமுல் காங்கிரஸ்), ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரப்பட்டது. அதே நேரத்தில், சில குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேலும் படிக்க : நிதி சுதந்திரத்தை அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயம்.. என்ன என்ன?
குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) , 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை (MGNREGA) நீக்கியது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். எனினும், அவர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகத் தெரிகிறது. மேலும், இந்த கூட்டத்தில் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாதது குறித்து ஜெய்ராம் ரமேஷ் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.