அணையில் குளிக்கச் சென்ற குடும்பம்.. 6 பேர் நீரில் மூழ்கி பலி
கர்நாடகா மார்கோனஹலி அணையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெங்களூரு அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழம் அறியாமல் நீர்நிலைகளில் இறங்குவதன் அபாயத்தையும், நீரில் ஓட்டம் அறியாமல் குளிப்பதால் ஏற்படும் விபரீதத்தையும் இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மார்கோனஹலி அணை
பெங்களூரு, அக்டோபர் 9: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள மார்கோனஹலி அணையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என பழமொழி ஒன்று சொல்வார்கள். குறிப்பாக நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் எக்காரணம் கொண்டும் நீச்சல் தெரியாமலும், ஆழம் அறியாமலும் நாம் இறங்கக்கூடாது. இல்லாவிட்டால் எதிர்பாராத விளைவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இப்படியான நிலையில் கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம், குனிகல் தாலுகாவில் உள்ள யடியூர் அருகே மார்கோனஹலி அணை உள்ளது.
இப்படியான நிலையில் கடந்த அக்டோபர் 6ம் தேதி துமகுரு நகரில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மகடிபால்யா கிராமத்தில் உள்ள தங்களது உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு முடிந்ததும் அவர்கள் அருகிலிருந்த மார்கோனஹலி அணையை பார்வையிட முடிவு செய்தனர். அன்றைய நாளின் மதிய உணவுக்குப் பிறகு அணைக்கு சென்ற அவர்கள் குளிக்க முடிவு செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கோயில் குளத்தில் மூழ்கிய 3 பேர்.. துடிதுடித்து பலி – திருவள்ளூரில் அதிர்ச்சி!
ஆனால் அணையில் நீரோட்டம் வலுவாக இருந்ததால் குளித்துக் கொண்டிருந்த அனைவரும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு நீரில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். மறுபக்கம் காவல்துறையினருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆழமான பகுதிக்குள் சென்ற நிலையில் மீட்புக் குழுக்கள் படகுகள் மற்றும் டைவர்ஸைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதலை விரைவுபடுத்த மண்டியா மாவட்ட நிர்வாகம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பிய நிலையில் அக்டோபர் 7ம் தேதி இரண்டு உடல்களும், அக்டோபர் 8ம் தேதி இரண்டு உடல்களும் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்.. உடல் ட்ரோன் உதவியுடன் மீட்பு
மீட்கப்பட்டவர்கள் சாஜியா, அர்பின், தபஸ்ஸும்மற்றும் மஹிப் என உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேசமயம் 44 வயதான ஷப்னம் மற்றும் 4 வயது மிஃப்ரா ஆகியோரை இன்னும் காணவில்லை என்றும், அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரா நவாஸ் என்பவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, துமகூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாகமங்கலா கிராமப்புற காவல் ஆய்வாளர் பி. நிரஞ்சன் கூறுகையில், உயிரிழந்த குடும்பத்தினர் அந்த அணைக்கட்டு பகுதியை நன்கு அறிந்தவர்கள், மேலும் சுற்றுலாவிற்கு அடிக்கடி அங்கு சென்று வந்திருக்கின்றனர். அந்த எண்ணத்தில் அணையில் குளிக்க முடிவு செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது என குறிப்பிட்டனர். எனினும் நாகமங்கலாவில் ஒரே விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்த முதல் சம்பவம் இதுவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.