இந்தியாவிலும் சமூக வலைத்தளங்களை பார்க்க வயது கட்டுப்பாடு.. ஆய்வறிக்கையில் தகவல்
In india age restrictions for viewing social media: டிஜிட்டல் தளங்களுக்கு அடிமையாவதால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும் அந்தப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
டெல்லி, ஜனவரி 30: டிஜிட்டல் தளங்களுக்கு அடிமையாவதால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2026-2027 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு 2025-2026 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான பொருளாதார வல்லுநர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 2026 மத்திய பட்ஜெட்.. வருமான வரி குறித்து எழும் முக்கிய எதிர்பார்ப்புகள்!
ரூபாயின் மதிப்பு சரிவு:
அதில், ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது என்பது உண்மைதான். எனினும், இது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை. அதன் உண்மையான வலிமையுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்தும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய ஒரு வலுவான நாணயம் அவசியம். வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதால் ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும்:
அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் இந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும், ஆனால் அது கவலைக்குரிய விஷயமாக இருக்காது. அதன் வலுவான அடிப்படைக் காரணிகளால், இந்தியா மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதத்திற்குள் வைத்திருக்க முடியும் என்ற இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அமெரிக்க வரிகள் இருந்தபோதிலும், அமெரிக்காவிற்கான பொருட்களின் ஏற்றுமதி 2.4 சதவீதமும், சேவை ஏற்றுமதி 6.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் உற்பத்திப் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வயதுக் கட்டுப்பாடு:
டிஜிட்டல் தளங்களுக்கு அடிமையாவதால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும் அந்தப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இளைஞர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தால் பாதிக்கப்படுவதால், இந்தியாவும் வயது அடிப்படையிலான அணுகலுக்கான ஒரு கொள்கையை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளலாம்.
இதையும் படிங்க: எட்டாக்கனியாய் மாறிய தங்கம்.. ஒரே நாளில் ரூ. 9,000 உயர்வு.. 17,000 ரூபாயை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்..
சமூக ஊடகங்கள் மற்றும் சூதாட்டப் பயன்பாடுகளின் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பை ஆன்லைன் தளங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.