மின்சார வாகனம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. நெடுஞ்சாலைகளில் வருகிறது சார்ஜிங் ஸ்டேஷன்..
Integrated terminal for e vehicle: இந்த ஒருங்கிணைந்த முனையங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், மின்சார வாகன ஓட்டிகள் எந்தவிதமான அச்சமும் இன்றி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மின்சார வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
‘சார்ஜிங்’, பழுது சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மின்சார வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த முனையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டு மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், பயணத்தின் போது பேட்டரியில் உள்ள சார்ஜ் தீர்ந்துவிட்டால் மீண்டும் சார்ஜ் செய்ய தேவையான நிலையங்கள் கிடைக்குமா? என்ற சந்தேகம் மின்சார வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு முக்கிய தடையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மக்களிடையே நிலவும் இந்த அச்சத்தை போக்கவும், மின்சார வாகன பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும், பயணத்தின் போது தேவையான தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு சேவைகளை உடனடியாக வழங்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த சேவை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: ஆந்திராவில் மிகப்பெரிய எரிவாயு கசிவு – தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறிய கிராமம் – அதிர்ச்சி சம்பவம்
நெடுஞ்சாலைகளில் ஒருங்கிணைந்த முனையம்:
இந்த நெடுஞ்சாலை ஓர ஒருங்கிணைந்த முனையங்கள் மின்சார வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல், வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், சார்ஜிங் வசதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் மையங்களாக செயல்படும்.
இந்த முனையங்களை எத்தனை கிலோமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும், அதற்கான வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள் என்ன என்பவை குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
அச்சமின்றி நீண்ட தூரம் பயணிக்கலாம்:
டெல்லி – மும்பை இடையே சுமார் 1,300 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலை பணிகள் தற்போது முன்னேற்ற நிலையில் உள்ளன. இந்த சாலை திட்டம் முழுமையடைந்தவுடன், முதற்கட்டமாக அங்கு மின்சார வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த முனையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இதுபோன்ற மின்சார வாகன சேவை முனையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: யூடியூபர் போர்வையில் சூதாட்டம்.. பல சொகுசு கார்கள்.. கோடிக்கணக்கில் சொத்து என மிரள வைத்த இளைஞர்!
இந்த ஒருங்கிணைந்த முனையங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், மின்சார வாகன ஓட்டிகள் எந்தவிதமான அச்சமும் இன்றி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மின்சார வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.