சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!!
CBSE Class 10th and 12th public exams: இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் வாரியத் தேர்வை எழுதாமல், நேரடியாக இரண்டாவது வாரியத் தேர்வை எழுதலாமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோப்புப் புகைப்படம்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.17 தொடங்குகிறது. இந்தத் தேர்வை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ்நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.17) தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதையும் படிக்க: வளர்ந்த இந்தியாவை நோக்கி மற்றொரு படி.. ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?
காலை 10.30க்கு தொடங்கும் தேர்வு:
இதில் பத்தாம் வகுப்பு தேர்வை 25 லட்சத்து 8319 பேர், 12-ம் வகுப்பு தேர்வை 18 லட்சத்து 59,551 பேர் என மொத்தம் 43 லட்சத்து 67,870 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுத இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் 8,074 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் 10-ம் வகுப்புக்கு கணிதம் பாடத்துக்கும், 12-ம் வகுப்புக்கு உயிரிதொழில்நுட்பம் முனைவோர் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வு மையத்தில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளன. தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகின்றன.
10ம் வகுப்புக்கு 2 பொதுத்தேர்வுகள்:
தேசிய கல்விக் கொள்கையின் படி, இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் வாரியத் தேர்வை எழுதாமல், நேரடியாக இரண்டாவது வாரியத் தேர்வை எழுதலாமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அனைத்து மாணவர்களும் முதல் வாரியத் தேர்வை எழுதுவது கட்டாயம் என சிபிஎஸ்இ தெளிவுப்படுத்தியுள்ளது. முதல் கட்ட தேர்வு இன்று தொடங்கும் நிலையில், 2வது கட்ட தேர்வு மே.15ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது.
இதை எழுத தவறினால் தகுதியில்லை:
தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்கும் விரும்பும் மாணவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 3 முக்கிய பாடங்களில் அதாவது, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதலாம் என விளக்கமளித்துள்ளது. முதல் தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதத் தவறிய மாணவர்கள் இரண்டாம் வாரியத் தேர்வு எழுதத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
மாணவர்கள் செல்போன் உட்பட மின்னணுப் பொருட்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வுக் காலங்களில் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை பெற்றோர், மாணவர்கள் நம்பவேண்டாம் எனவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் மாணவர்களே..