300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி – அதிர்ச்சி தகவல்
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் இராணுவம் மேற்கு எல்லையில் இந்திய வான்வெளி பகுதியில் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைந்து இராணுவ உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025, மே 8 ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்தனர். அதில் 2025 ஆம் ஆண்டு மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளின் இரவில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்த முயன்றதாக கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் சிலர் உள்ளேயும் ஊடுருவ முயன்றனர். அதேசமயம் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சோபியா குரேஷி குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் போட்ட திட்டம்
#WATCH | Delhi: Colonel Sofiya Qureshi says, “..Around 300 to 400 drones were used (by Pakistan) to attempt infiltration at 36 locations…Forensic investigation of the wreckage of the drones is being done. Initial reports suggest that they are Turkish Asisguard Songar drones…” https://t.co/JndIIgFNYh pic.twitter.com/J1wc4gYPDQ
— ANI (@ANI) May 9, 2025
பாகிஸ்தான் இராணுவம் மேற்கு எல்லையில் இந்திய வான்வெளி பகுதியில் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைந்து இராணுவ உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டது. 36 இடங்களில் நடைபெற்ற இந்த ஊடுருவல் முயற்சியில் சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்
அதேசமயம் மே 8 ஆம் தேதி இந்தியாவை குறிவைக்க துருக்கியின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோனைப் பாகிஸ்தான் பயன்படுத்தியதாக விங் கமாண்டர் வியோமியாக் சிங் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் பொதுமக்கள் பயன்படுத்தும் விமானங்களை தங்கள் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துவதாகவும், மே 7 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய போதிலும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்தியா மீதான தாக்குதலுக்கு அந்நாடு விரைவான பதிலடியை வான் பாதுகாப்பு வழியாக தரும் என்பதை முழுமையாக அறிந்திருந்தும், பாகிஸ்தான் இப்படி செய்துள்ளது எனவும் கூறினார்.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த சர்வதேச விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியது. இதற்கிடையில் இந்தியாவின் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.