ஆண்டின் 365 நாட்களும் 24×7 செயல்படும் அப்போலோ மருத்துவமனைகள் – எதிர்கால மருத்துவமனை திட்டம் அறிவிப்பு
அப்போலோ மருத்துவமனைகள் நடத்திய இண்டர்நேஷனல் ஹெல்த் டயலாக் (IHD) 2026 மாநாடு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. உலகின் குரல்கள், ஓரே பார்வை என்ற பெயரில் நடைபெற்ற இந்த இரு நாள் மாநாட்டில், நேரடியாகவும் ஆன்லைனிலும் 27,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இண்டர்நேஷனல் ஹெல்த் டயலாக் மாநாடு
ஹைதராபாத், ஜனவரி 31, 2026: அப்போலோ மருத்துவமனைகள் நடத்திய இண்டர்நேஷனல் ஹெல்த் டயலாக் (IHD) 2026 மாநாடு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. உலகின் குரல்கள், ஓரே பார்வை என்ற பெயரில் நடைபெற்ற இந்த இரு நாள் மாநாட்டில், நேரடியாகவும் ஆன்லைனிலும் 27,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்து 75க்கும் மேற்பட்ட மருத்துவ, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, 300க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 120க்கும் மேற்பட்ட விருது விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. நோயாளி பாதுகாப்பு, சுகாதார அமைப்புகளில் சமத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
365 நாட்களும் 24×7 சேவை
மாநாட்டில் காணொலி வழியாக உரையாற்றிய அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, “மக்கள் நோயுற்றால் மருத்துவ சேவைகள் ஓய்வு எடுக்கக் கூடாது. வார இறுதி நாட்கள், விடுமுறைகள் என எந்த நாளாக இருந்தாலும், அப்போலோ மருத்துவமனைகள் ஆண்டின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும்” என்று அறிவித்தார். மேலும், தொழில்நுட்பம் மனிதாபிமானத்தை மாற்றுவதற்கல்ல, அதற்கு சேவை செய்யவேண்டும். எதிர்கால மருத்துவ அமைப்பு மருத்துவமனைகளுக்குள் மட்டுமல்ல, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் இணைந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்த அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி ஹைதராபாத்தில் விரைவில் எதிர்கால மருத்துவமனை அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். மேலும் பேசிய அவர், மருத்துவம் இனி நிறுவன மையமாக அல்லாமல் முழுமையான அமைப்பு மையமாக மாறுகிறது. சிகிச்சையிலிருந்து தொடர்ச்சியான ஆரோக்கிய பராமரிப்புக்கு நாம் நகர்கிறோம். ஏஐ என்பது கூடுதல் அம்சம் அல்ல. அது மருத்துவத்துறையின் இயங்கும் அடுக்காக மாறி வருகிறது” என அவர் தெரிவித்தார்.