Heart Disease India: இந்தியாவில் உயரும் இதய நோய் பாதிப்பு.. முக்கிய பொருள் குறித்து ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!
Cardiovascular Disease Prevention: இந்தியாவில் இதய நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் இதற்கு முக்கிய காரணம் என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கிறது. நகர்ப்புறங்களில் ஒருவர் தினமும் 9.2 கிராம் உப்பும், கிராமப்புறங்களில் 5.6 கிராம் உப்பும் உட்கொள்கிறார்கள். இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

இதய நோய் குறித்து ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
உலக முழுவதும் இதய நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்டது. ஆனால், இப்போது இளைஞர்கள், 20 வயதுக்குட்பட்டவர்கள் கூட, மாரடைப்பு (Heart Attack) பிரச்சனையை சந்திப்பது மட்டுமின்றி, இதனால் உயிரையும் இழக்கின்றனர். உணவுக் கோளாறுகளுக்கும், இதய நோய்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பல ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. சோடியம் (சமையல் உப்பு) (Salt) அதிகமாக உட்கொள்வது இதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்திய மக்கள் அதிகளவில் உப்பை எடுத்து கொள்கின்றனர். இதன் காரணமாக சுகாதார நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றனர்.
ALSO READ: உணவில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் – உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? தவிர்ப்பது எப்படி?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மக்களையும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறுகையில், “ இந்தியாவில் மக்கள் அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள். அதிகப்படியான உப்பு உட்கொள்வது இந்தியாவில் ஒரு அமைதியான தொற்றுநோயை ஊக்குவிக்கிறது. இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இந்த பழக்கம் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய்களையும் அதிகரிக்கும். இந்த சிக்கலை தீர்க்க, விஞ்ஞானிகள் சமூக அடிப்படையிலான உப்பு உட்கொள்ளலை குறைப்பதற்கான ஒரு ஆய்வை தொடங்கியுள்ளனர். இதில், குறைந்த சோடியம் உப்பு கவனம் செலுத்தி அவற்றை ஊக்குவிப்பது பரிசீலிக்கப்படுகிறது.
எவ்வளவு உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது..?
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி, ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். இருப்பினும், நகர்ப்புறங்களில் உள்ள இந்தியர்கள் தினமும் சுமார் 9.2 கிராம் உப்பை உட்கொள்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இது மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இது ஒரு நாளைக்கு சுமார் 5.6 கிராம் ஆகும். இவை இரண்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிக அதிகம்.
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் (NIE) மூத்த விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் ஷரன் முரளி கூறுகையில், ”சோடியம் குளோரைட்டின் ஒரு பகுதியை பொட்டாசியம் அல்லது மெக்னீசியம் உப்புகளால் மாற்றும் முறையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். குறைந்த சோடியம் உட்கொள்ளல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ALSO READ: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் மன அழுத்தம் – எப்படி தவிர்ப்பது?
இது உப்பைக் குறைப்பது மட்டுமல்ல. நமது உணவு, நமது உடல் மற்றும் நமது இதயத்திலும் சமநிலையைப் பராமரிப்பது பற்றியது. ஒன்றாக, உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் நாம் நீடித்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.” என்று தெரிவித்தார்.