Cough Syrup: குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்கிறீர்களா..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
Cough Syrup Row: 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று குழந்தைகள் நல மருத்துவர் கூறுகின்றனர். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வழங்கப்படும் இருமல் சிரப்பின் அளவுகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, பெரியவர்களின் இருமல் சிரப்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

இருமல் சிரப்
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மாசுபட்ட இருமல் சிரப் காரணமாக சிறுவர் – சிறுமியர்கள் உயிரிழந்த நிலையில், பெற்றோர்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு (Childrens) இருமல் சிரப் கொடுக்கலாமா வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் தானாகவே குணமாகும். எனவே, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் (Cough Syrup) கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று குழந்தைகள் நல மருத்துவர் கூறுகின்றனர். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வழங்கப்படும் இருமல் சிரப்பின் அளவுகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. அதன்படி, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்தாளரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எந்த சிரப்பையும் கொடுக்கக்கூடாது. இது குழந்தைகளுக்கு ஆபத்தானதாக மாறும்.
சிரப் கொடுக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்:
மருந்துகளின் அளவுகள் என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையில் வேறுபடுகின்றன. பெரியவர்களுக்கு நன்மை பயக்கும் மருந்துகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் பயன்படுத்தும் இருமல் சிரப் மருந்துகளை தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். பெரியவர்களுக்கு வழங்கப்படும் சிரப் மருந்துகள் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஒரு குழந்தைக்கு எந்த மருந்தையும் கொடுப்பதற்கு முன்பு, குழந்தைகள் நல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் சில இருமல் சிரப்களில் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன. இது எக்காரணத்தை கொண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படக்கூடாது. இது குழந்தைகளின் இதயங்களையும் சிறுநீரகங்களையும் பாதிக்க செய்யும்.
ஆஸ்பிரின் ஆபத்து:
குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டிய மருந்துகளில் ஆஸ்பிரின் மிக முக்கியமானது. ஆஸ்பிரின் அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. தலைவலி, பல் வலி, சளி, காய்ச்சல் மற்றும் மாதவிடாய் வலிக்கு ஆஸ்பிரின் பயன்படுத்தப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆஸ்பிரின் கொடுப்பது, கல்லீரல் மற்றும் மூலையை பாதிக்கும் ரேய்ஸ் நோய்க்குறி எனப்படும் கடுமையான நிலையை ஏற்படுத்தும்.
ALSO READ: குழந்தைகள் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா? எவ்வளவு நேரம் அணிய வேண்டும்..?
பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன..?
குழந்தைகளுக்கு அவர்களின் வயது மற்றும் எடையின் அடிப்படையில் எப்போதும் மருந்துகளை மருத்துவர்கள் ஆலோசனையின்படி வழங்க வேண்டும். எந்த மருந்தையும் கொடுப்பதற்கு முன் லேபிள் மறும் மருந்தளவு வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும். அதிக காய்ச்சல், வாந்தி அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனையை உங்கள் குழந்தைகள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.