மீண்டும் திரையை ஆக்கிரமிக்கும் 90ஸ் ஹீரோயின்கள்.. மாறும் கதைக்களம்!
தமிழ் சினிமாவில் 90களின் பிரபல ஹீரோயின்கள் மீண்டும் திரைக்கு வருவது புதிய மாற்றத்தை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது. குடும்பப் படங்கள் மீதான சிந்தனை மற்றும் யதார்த்தமான கதைகளின் அதிகரிப்பு இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த மறுமலர்ச்சி தமிழ் சினிமாவில் யதார்த்த கதைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

சினேகா, லைலா, சிம்ரன், தேவயானி
தமிழ் சினிமாவில் (Tamil Cinema) மாற்றம் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் அனைத்து துறைகளிலும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் நாம் பார்த்து ரசித்த விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பி வருவது மனதிற்கு ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியை தான் உண்டாக்குகிறது. அப்படியான விஷயங்கள் தான் ரீ-ரிலீஸ் படங்கள் வெளியீட்டின் போது நடந்தது. சிறு வயதில் தியேட்டரில், பலமுறை டிவியில் நாம் பார்த்து ரசித்த ஒரு படம் மீண்டும் தியேட்டருக்கு (Theatre) வருகிறது என்றால் சொல்லவா வேண்டும். இப்படியான நிலையில் மீண்டும் 90களில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளது சினிமா பிரியர்களிடையே பெரும் வரவேற்பை உண்டாக்கியுள்ளது என சொல்லலாம்.
சினிமா மக்களின் ஒரு அங்கமாக மாறிய காலக்கட்டத்தில் இருந்தே குடும்ப படம், காதல் படம், சோக படம், சண்டை படம் என பல ஜானர்கள் இருந்தது. அதேசமயம் கவர்ச்சி காட்டாத ஹோம்லி ஹீரோயின்கள், கவர்ச்சிக்கு என்றே பட்டியலில் இடம் பெற்ற ஹீரோயின்கள் என வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. சொல்லப்போனால் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கவர்ச்சி என்பது கதையின் ஓரத்தில் இருந்தது. அதனால் மக்கள் ஹீரோ, ஹீரோயின்கள் மேல் ஒரு அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கதை தான் அனைத்தையும் தீர்மானிக்கும்
இவர்கள் படம் என்றால் கதையில் எந்த விரசமும் இருக்காது. குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என யோசிக்காமல் செல்வார்கள். அப்படியான சூழலில் கவர்ச்சியை பிரதானமாக்கி சண்டையை மூலக்கதையாக்கி ஒரு படத்தை எடுத்தால் வெற்றி பெறலாம் என பலரும் யோசிக்கிறார்கள். மேலே சொன்னது போல ஒரு கதை தான் அது வெற்றிப்படமா இல்லை தோல்விப்படமா என்பதையும், அதில் நடித்த பிரபலங்கள் மக்கள் மனதில் எத்தகைய இடத்தைப் பெறப் போகிறார்கள் என்பதையும் தீர்மானிக்கும்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு நூற்றுக்கணக்கானோர் அறிமுகமாகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். சிலர் துணை வேடங்களை ஏற்று சினிமாவில் இடம் பெறுகின்றனர். இந்த ஹீரோயின்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கட்டம் வரை சென்று தனிப்பட்ட வாழ்க்கை, வாய்ப்பு இல்லாமல் போவது, துணை வேடங்கள் வேண்டாம் என ஒதுங்கி விடுவது என ஃபீல்டில் இல்லாமல் போவார்கள். இதில் ஜோதிகா மாற்றத்திற்கான விதையாக வந்து விழுந்தார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் ஹீரோயினுக்கான கதை என்ற ஒரு புதிய பாதையை ஆரம்பித்து வைத்தார் என்றே சொல்லலாம். ஜோதிகா நடித்த 2000ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், லைலா, சினேகா, தேவயானி, மீனா என பலரும் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளது பாசிட்டிவ் எண்ணங்களை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் கதைத்தேர்வு நிச்சயம் குடும்பத்தினர் பார்க்கும் வகையில் இருக்கும் என்ற எண்ணம் இயல்பாகவே மக்களிடம் உள்ளது.
சமீபத்தில் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி, தேவயானி நடிப்பில் வெளியான நிழற்குடை ஆகியவை பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. மீண்டும் யதார்த்ததை மையப்படுத்திய கதைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மீண்டும் வரும் ஹீரோயின்களுக்கு நிச்சயம் ரசிகர்களின் எண்ண ஓட்டம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பார்கள். அதற்கான கதைகளும் படமாக வெளியாகும் பட்சத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான தொடக்கம் அமையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.