அஜித்தின் ‘குட் பேட் அக்லி’: ரெட்ரோ பாடலுக்கு அர்ஜுன் தாஸ் – பிரியா வாரியர் நடனம்? காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Ajith Kumar Good Bad Ugly: குட் பேட் அக்லி பட டிரெய்லரிலும் ஒத்த ரூபா தாரேன் என்ற இளையராஜா பாடலை பயன்படுத்தி 'மார்க் ஆண்டனி' ஸ்டைலில் எடிட் செய்யப்பட்டிருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குட் பேட் அக்லி படத்தில் பழைய ரெட்ரோ பாடலுக்கு அர்ஜுன் தாஸும் பிரியா வாரியரும் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக அந்த டிரெண்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தனது கைதி படத்தில் தொடங்கி வைத்தார் என சொல்லலாம். கைதி படத்தின் பரபரப்பான காட்சியில் தமிழில் சூப்பர் ஹிட்டான ரெட்ரோ பாடல்களை ஒலிக்கவிட்டு ரசிகர்களுக்கு புது அனுபத்தைக் கொடுத்தார். தொடர்ச்சியாக அவரது படங்களில் பழைய ரெட்ரோ பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவரது மாஸ்டரில் (Master) கருத்தமச்சான் பாடல், விக்ரமில் சக்கு சக்கு வத்திகுச்சி பாடல் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக சக்கு வத்தி குச்சி பாடல் அப்போது வெளியான காலகட்டத்தைவிட விக்ரம் படத்துக்கு பிறகு மிகவும் பிரபலமானது. இந்தப் பாடல் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் இடம்பெற்றிருந்தது. ஆதித்யன் இசையில் உருவான இந்தப் பாடல் மிகவும் பிரபலமான நிலையில் இந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) புரோகிராமிங் செய்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
அதற்கு முன் 96, பேட்ட போன்ற படங்களில் பழைய கிளாசிக் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் லோகேஷ் தான் பரபரப்பான காட்சிக்கு பின்னணியில் இந்த ரெட்ரோ பாடல்களை புகுத்தி வித்தியாசமான காட்சி அனுபவத்தை தனது ரசிகர்களுக்கு கொண்டுவந்தார். அதன் பிறகு தனது லியோ படத்தில் சண்டைக்காட்சியில் பின்னணியில் ஏழையின் சிரிப்பில் படத்தின் கரு கரு கருப்பாயி பாடலும், பசும்பொன் படத்தின் தாமரைப் பூவுக்கும் பாடலையும் பயன்படுத்த அந்தப் பாடல்கள் மீண்டும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
திரைப்படங்களில் டிரெண்டாக மாறிய ரெட்ரோ பாடல்கள்
View this post on Instagram
அவரைத் தொடர்ந்து நெல்சன், ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இயக்குநர்களும் பழைய ரெட்ரோ பாடல்களை தனது படங்களில் பயன்படுத்த துவங்கினர். ஜெயிலர் படத்தில் தாளம் பட ‘எங்கே என் புன்னகை’ பாடலுக்கு வில்லன் விநாயகன் நடனமாட அந்த பாடல் மிகவும் பிரபலமானது. ஆதிக் ரவிச்சந்திரன் தனது மார்க் ஆண்டனி படத்தில் தேவாவின் இசையில் எட்டுபட்டி ராசா பாடலான பஞ்சு மிட்டாய் படத்தில் பயன்படுத்தினார். குறிப்பாக அந்த பாடலை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டிருந்த டிரெய்லர் படத்தின் வெற்றிக்கு ஒரு பெரும் காரணம் என்றே சொல்லலாம். தற்போது அவரது குட் பேட் அக்லி பட டிரெய்லரிலும் ஒத்த ரூபா தாரேன் என்ற இளையராஜா பாடலை பயன்படுத்தி ‘மார்க் ஆண்டனி’ ஸ்டைலில் எடிட் செய்யப்பட்டிருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
குட் பேட் அக்லியின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் பழைய ரெட்ரோ பாடலுக்கு அர்ஜுன் தாஸும் பிரியா வாரியரும் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரும் புதிரும் படத்தில் வித்யாசாகர் இசையில் இடம்பெற்ற தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு அர்ஜுன் தாஸும், பிரியா பிரகாஷ் வாரியரும் நடனமாடியுள்ளதாகவும் அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன்தாஸ், பிரபு, சுனில், சிம்ரன், ஜாக்கி ஷெராஃப், ராகுல் தேவ், கிங்ஸ்லி, யோகி பாபு, பிரியா பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக நீீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் – சிம்ரன் ஜோடியை படத்தில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் நடிப்பில் முழு கமர்ஷியல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் ஏற்படுத்தியிருக்கிறது.