பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம்.. புதிய நிர்வாக குழுவை அறிவித்தார் ராமதாஸ்..
PMK Anbumani Removal: பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 6, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாக குழுவில் இருந்து செயல் தலைவர் அன்புமணி ராமதாசை நீக்கி கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இருந்த நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே இருக்கக்கூடிய அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எம்.எல்.ஏ அருளை கொறடா பதவியிலிருந்து நீக்கிய அன்புமணி:
அதில் முக்கியமாக ஜூலை 4, 2025 ஆம் தேதி ராமதாஸ் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்கி அன்புமணி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதோடு அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்-களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் அருளை கொறடா பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக சட்டமன்ற செயலாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதேசமயம் சபாநாயகர் அப்பாவுவையும் அவர்கள் சந்தித்துள்ளனர். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் சட்டமன்ற செயலாளரை சந்தித்து கொறடாவாக நீடிக்க விரும்புவதாக கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
அன்புமணியை நிர்வாக குழுவில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை:
இப்படி அப்பா மகனுக்கு இடையே இருக்கக்கூடிய அதிகார போட்டி ஒரு படி மேலே சென்றுள்ள நிலையில் ஜூலை 5 2025 தேதி ஆன நேற்று பாமகவின் நிர்வாக குழு கூட்டத்தை தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் நடத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுவில் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், ராவணன் உள்ளிட்டவர்கள் தலைமை நிர்வாகிகளாக இடம்பெற்று இருந்தனர். ஆனால் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸை தலைமை நிர்வாக குழுவில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அந்த குழுவை கலைத்துவிட்டு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 21 நபர்களைக் கொண்ட புதிய நிர்வாக குழுவையும் அமைத்துள்ளார். இந்த புதிய நிர்வாக குழுவில் பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், ஜி கே மணி, மூர்த்தி, அருள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கட்சி நிறுவனர் ராமதாஸின் இந்த அதிரடி நடவடிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது