EPFO புதிய விதிமுறைகள் – பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 தகவல்கள்
EPFO 2025 Updates : இபிஎஃப்ஓ, 2025-ல் பணியாளர்களுக்கு எளிதான சேவைகளை வழங்கும் நோக்கில் பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் மூலம் அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த மாற்றங்கள் குறித்து பணியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 4 தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணயம் (EPFO) என்பது இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாளர்களின் வருங்கால தேவைக்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட அமைப்பாகும். அதன் படி மாதந்தோறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதி மற்றும் நிறுவனங்களின் அளிக்கும் பணம் ஆகியவை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை ஊழியர்கள் ஓய்வு பெறும்போதோ அல்லது அவசர தேவைகளுக்கோ எடுத்து பயன்படுத்தலாம். இந்த நிலையில் 2025ம் ஆண்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம்( EPFO – Employees’ Provident Fund Organisation) பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் இபிஎஃப் உறுப்பினர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தவும், அனைத்து பணிகளையும் டிஜிட்டல் முறையில் மாற்றவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
1.ஆன்லைனில் விண்ணப்பம்.
கடந்த 2025 ஜனவரி 16 முதல், EPFO ஆனது விண்ணப்ப முறையை (Joint Declaration) ஆன்லைனில் செய்துகொள்ளலாம். இது மூலம் இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களது யுஏஎன் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து ஆன்லைன் மூலம் நேரடியாக இணையலாம். ஆன்லைன் மூலம் இணைய வேண்டும் என்றால் உங்கள் யுஏஎன் கணக்கு ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், பழையபடி ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
2. புரொஃபைல் அப்டேட்
முன்பு, பெயர், பிறந்த தேதி, பாலினம், பெற்றோர் பெயர், திருமண நிலை, துணையின் பெயர் போன்ற விவரங்கள் தொடர்பாக மாற்றங்கள் செய்ய பணியாளர் மற்றும் நிறுவனத்தின் இணைந்த ஒப்புதல் தேவைப்பட்டது. இப்போது ஆன்லைனிலேயே நம் விவரங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். குறிப்பாக 2017 அக்டோபர் 1க்கு முன்னர் உருவாக்கப்பட்ட யுஏஎன் கணக்கிற்கு நிறுவனங்கள் ஒப்புதல் தேவை இல்லை என கூறப்படுகிறது.
3. வேலை மாறும் போது பிஎஃப் தொகையை எளிதாக மாற்றலாம்
முன்னர் வேலையை மாற்றும்போது, இபிஎஃப் தொகையை புதிய கணக்கிற்கு மாற்ற நிறுவனத்தின் ஒப்புதல் அவசியமாக இருந்தது. 2025 ஜனவரி 15 முதல், இந்த ஒப்புதல் தேவையில்லை. உறுப்பினர் தனது EPF தொகையை நேரடியாக மாற்றிக்கொள்ளலாம், இது நிறுவனத்தின் ஒப்புதலை தவிர்க்கும் வகையில் உள்ளதால் பணியாளர் எளிதில் தனது பணத்தை பெற முடியும்.
4. எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதியம் பெறலாம்
2025, ஜனவரி 1 முதல், இபிஎஃப்ஓ Centralised Pension Payment System என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்கள் எந்த வங்கியிலிருந்தும் தங்களது ஓய்வூதியத்தை பெற முடியும். Pension Payment Order எண்ணும் இப்போது யுஏஎன் எண்ணுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியம் தொடர்பான தேவைகளுக்கு அலுவலகம் செல்ல தேவையில்லை.
இந்த மாற்றங்கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கான சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்வதோடு, நேரத்தை மிச்சப்படுத்தும். மேலும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டிய சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு உங்கள் யுஏஎன் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். அதன் பிறகு மட்டுமே ஆன்லைன் மூலம் சேவைகளை பெற முடியும்.