‘செஸ் மதத்துக்கு எதிரானது’ – ஆப்கானிஸ்தானில் விளையாடத் தடை
Taliban bans chess : ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு சூதாட்டத்துடன் தொடர்புடையதாகவும், இஸ்லாமிய ஷரீயா சட்டத்திற்கு எதிரானதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது. மதரீதியான கவலைகள் தீர்க்கப்படும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) செஸ் (Chess) விளையாட்டு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய சட்டமான ஷரீயா விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி தாலிபான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. செஸ் சூதாட்டத்துடன் தொடர்புடையதாக கருதி, தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. தாலிபானின் விளையாட்டுத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. விளையாட்டுத்துறை பேச்சாளர் அதல் மஷ்வானி கூறியதாவது, செஸ் என்பது சூதாட்டம் போலக் கருதப்படுகிறது. அதனால் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஷரீயா சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட Propagation of Virtue and Prevention of Vice சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மதத்துக்கு எதிரானது
செஸ் விளையாட்டை மீண்டும் அனுமதிக்க மத அடிப்படையில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மத ரீதியாக செஸ் விளையாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அதனால் தற்போது செஸ் விளையாட அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செஸ் தடையால் ஏற்படும் பாதிப்புகள்
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஒரு கஃபேவின் உரிமையாளரான அஜிஸ் குல்ஜாதா வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக அவரது இடத்தில் பல இளைஞர்கள் செஸ் விளையாட வருவதாகக் கூறினார். மேலும், ”இது சூதாட்டம் அல்ல. பல இஸ்லாமிய நாடுகளில் செஸ் விளையாடுபவர்கள் இருக்கின்றனர். எனது வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் இளைஞர்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ள அந்த இடம் இந்த தடையால் பாதிக்கப்படும். இங்கு இளைஞர்களுக்காக அதிகமான பொழுதுபோக்குகள் இல்லாத நேரத்தில், செஸ் அவற்றில் ஒன்றாக இருந்தது. இங்கே வரும் இளைஞர்கள் ஒரு டீ குடித்துவிட்டு நண்பர்களுடன் விளையாடுவார்கள். என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னர் தடை செய்யப்பட்ட விளையாட்டுகள்
இதற்கு முந்தைய ஆண்டுகளில் பல விளையாட்டுகள் அப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க தாலிபான் அரசு முழுமையாக தடையே விதித்துள்ளது. கடந்த ஆண்டு, மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) போன்ற சண்டை விளையாட்டுகளும், வன்முறை மற்றும் ஷரீயாவுக்கு எதிரானதாகக் கருதி தடைசெய்யப்பட்டது. தாலிபான் அரசு கொண்டு வரும் சட்டங்கள் மற்றும் தடைகள், ஆப்கானிஸ்தான் மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கின்றன. விளையாட்டுகள் மட்டுமின்றி, பொழுதுபோக்குகளும் இளைஞர்களிடம் இருந்து விலக்கப்படுவது நாட்டின் எதிர்காலத்துக்கு பெரும் கேள்விக்குறியாக அமையும் என பலரும் எச்சரிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடைசெய்த தாலிபான் அரசின் முடிவு, இளைஞர்களின் விளையாட்டு வாய்ப்புகளையும், சமூகச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மத நம்பிக்கையை காரணமாகக் கொண்டு விளையாட்டுகளைத் தடுப்பது, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளுக்கும் தடையாக அமையும்.