ஆபரேஷன் சிந்தூர்… இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை.. சீனா அனுப்பிய மெசேஜ்!
Operation Sindoor : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கிறது என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், சீனா கருத்து கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என இந்திய ராணுவம் பெயரிட்டு உள்ளது. காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
ஆபரேஷன் சிந்தூர்
இதற்கிடையில், தாக்குதல் குறித்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனா தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்க முடியாத அண்டை நாடுகள். மேலும், இரு நாடுகளும், சீனாவின் அண்டை நாடுகளும் ஆகும். சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்” என்றார்.
இந்தியாவுக்கு சீனா அனுப்பிய மெசேஜ்
“China finds India’s military operation early this morning regrettable. We are concerned about the ongoing situation. India and Pakistan are and will always be each other’s neighbours. They’re both China’s neighbours as well. China opposes all forms of terrorism. We urge both… pic.twitter.com/b8jLybfCPN
— ANI (@ANI) May 7, 2025
முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “இது ஒரு அவமானம், நாங்கள் இப்போதுதான் அதைப் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டாம்” என வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் கூறுகையில், “இந்தியா தற்காப்பு உரிமையை ஆதரிக்கிறது. பயங்கரவாதிகள் அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.