Melissa Cyclone: ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய மெலிஸா புயல்!
storm heads toward Cuba: மத்திய அமெரிக்க பகுதியின் கடலில் நகர்ந்து வந்த மெலிஸா புயலால், தென்மேற்கு ஜமைக்கா கடும் சேதங்களை சந்தித்துள்ளன. தொடர்ந்து, மெலிஸா புயல் கியூபாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜமைக்காவில் கடும் சேதம்
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை சூறையாடிய மெலிஸா (Melissa) புயல், தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டு உள்ளன. இப்புயலால் ஜமைக்காவுக்கு பேரழிவு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் கவலை தெரிவித்திருந்தார். இந்த புயலால், ஜமைக்கா மட்டுமல்லாமல், ஹைதி, டோமினிகன் குடியரசு உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஜமைக்காவின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டிருந்த இப்புயல், மேலும் தவீரத் தன்மை கொண்டதாக கியூபாவை நோக்கி நகர்கிறது.
வரலாறு கண்டிராத வலிமையான புயல்:
இதுவரை வரலாறு கண்டிராத மிக வலிமையான புயலாக உருவாகியுள்ள மெலிஸா, 5ஆம் நிலை தீவிரத் தன்மை கொண்ட புயலாக ஜமைக்காவை தாக்கியது. இந்த புயலை தாங்கும் அளவிற்கு அந்நாட்டில் எந்த கட்டடங்களும் வலிமையானது இல்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 174 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜமைக்காவில் இந்த புயல் கடந்துள்ளது. அமெரிக்க தேசிய சூறாவளி மையம் அளித்த தகவலின்படி, தென்மேற்கு ஜமைக்காவில் உள்ள நியூ ஹோப் அருகே மெலிசா கரையை கடக்கும்போது மணிக்கு 298 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது.
இதையடுத்து, அந்த முழு தீவையும் பிரதமர் ஆண்ட்ரூ, ‘பேரழிவுப் பகுதி’ என்று அறிவித்துள்ளார். இதுவரை அங்கு 7 பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜமைக்காவின் விவசாய மண்டலங்களை மெலிஸா கடுமையாக தாக்கியதால், பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. அங்குள்ள பிரபலமான செயிண்ட் எலிசபெத் சர்ச்சிலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, பொது மருத்துவமனைகள் மின்சாரமின்றி தவிப்பதுடன், பெரும் கட்டமைப்பு சேதத்தை சந்தித்துள்ளது.
Also read: துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்.. நள்ளிரவில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
கியூபாவை நோக்கி மெலிஸா:
தீவின் பெரும்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேதத்தை முழுமையாக மதிப்பிடுவதற்கு பல நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஜமைக்காவைத் தாக்கிய பிறகு, மெலிஸா 4ஆம் வகை புயலாக சற்று பலவீனமடைந்து தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்து வருகிறது. அங்கு அது சாண்டியாகோ டி கியூபா நகரை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல், கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மெலிஸா புயலின் கண் பகுதி:
BREAKING: New video shows the catastrophic damage from Category 5 Hurricane Melissa in Black River, Jamaica.
So sad. pic.twitter.com/IUQRhVGSK4
— Brian Krassenstein (@krassenstein) October 29, 2025
முன்னதாக, புயல் எச்சரிக்கை மையத்திற்குத் தகவல்களை சேகரிப்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழு, மெலிஸா புயலின் கண் பகுதிக்குள் பறந்து சென்று படம் பிடித்துள்ளனர். இக்காட்சிகள் காண்போரை பிரம்மிக்க வைத்தன.