Amazon Prime Video : பிரைம் வீடியோவில் விளம்பரமில்லாமல் பார்க்க இவ்வளவு கட்டணமா? புதிய அறிவிப்பு
Amazon Prime Update: : பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற ஜூன் 17, 2025 முதல் விளம்பரம் இடம் பெறும் என அறிவித்துள்ளது. மேலும் விளம்பரம் இல்லாம் பார்க்க கூடுதல் கட்டணத்தையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
பிரபல ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் (Amazon Prime) வீடியோ ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளது. அதன் படி வருகிற ஜூன் 17, 2025 முதல், பிரைம் வீடியோவில் நாம் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் இடையில் விளம்பரங்கள் இடம்பெறும் என அறிவித்திருக்கிறது. தொலைக்காட்சி சேனல்களில் திரைப்படங்கள் (Movies) மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு இடையே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதை போல இனி அமேசான் பிரைமில் விளம்பரங்கள் வெளியாகும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டீரிமிங் தளங்களில் விளம்பரங்கள்
சமீபத்தில் பல ஓடிடி நிறுவனங்கள், தங்கள் வருவாயை அதிகரிக்கும் வகையில் விளம்பர அடிப்படையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஹாட்ஸ்டாரில் விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன. விளம்பரங்கள் தேவையில்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிசையில் இப்போது அமேசானும் சேர்ந்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் எதிர்காலத்திலும் தரமான சேவைகளை வழங்குவதற்காகவும் இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக அமேசான் பிரைம் வீடியோ தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படி, தற்போதைய பிரைம் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், விளம்பரமில்லா அனுபவம் வேண்டும் என விரும்பும் பயனாளர்களுக்கு, புதிய பிளானை அமேசான் அறிவித்துள்ளது. அதன் படி ஆண்டுக்கு ரூ. 699 செலுத்தியோ அல்லது மாதத்திற்கு ரூ.129 செலுத்தியோ இந்த பிளானில் இணைந்து கொள்ளலாம்.
ஏன் இந்த மாற்றம்?
மற்ற டிவி சேனல்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை விட மிகக் குறைவான விளம்பரங்களுடன், பயனாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்குவதே எங்களின் நோக்கம் எனவும் எதிர்காலத்தில் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதற்காகவே இந்த மாற்றம் எனவும் அமேசான் அறிவித்துள்ளது. தற்போது நீங்கள் செலுத்தும் பிரைம் சந்தா விலையில் எந்த மாற்றமும் இல்லை. விளம்பரமில்லா அனுபவம் வேண்டுமானால் மட்டும் கூடுதல் கட்டண சேவையை தேர்வு செய்யலாம்.
மற்ற ஓடிடி தளங்களில் எவ்வளவு கட்டணம்?
இப்போது முக்கியமான ஸ்ட்ரீமிங் தளங்களில் பெரும்பாலானவை விளம்பர அடிப்படையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ் போன்ற ஓடிடி தளங்கள் விளம்பரங்கள் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. நெட்ஃபிளிக்ஸில் படங்களுக்கு இடையில் விளம்பரம் வராது என்றாலும் துவக்கத்தில் சில விளம்பரங்கள் மட்டும் இடம்பெறுகின்றன. ஆனால் அதற்கென கட்டணங்கள் மாறுபடவில்லை.
ஜியோ ஹாட்ஸ்டாரில் விளம்பரத்துடன் பார்க்க ஆண்டுக்கு ரூ. 899 கடட்ணமும் விளம்பரமில்லாமல் பார்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 1499 கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது. ஜி5 ஓடிடி தளத்தில் ரூ.599 என்ற கட்டணமும், விளம்பரம் இல்லாமல் பார்ப்பதற்கு ரூ.999 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் விளம்பரத்துடன் பார்க்க ரூ.599 என்ற கட்டணமும் விளம்பரம் இல்லாமல் பார்க்க ரூ.999 என்ற கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.