Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடலூர்: காதலனின் வஞ்சனை, உயர் அதிகாரிகளின் பழிவாங்கல்.. பெண் போலீசாரின் விபரீத முடிவு

Woman Police Officer Dies: சென்னை ஆவடி ஆயுதப்படை பெண் போலீசாக பணியாற்றிய சோனியா, காதலித்து திருமணமான முகிலனுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தார். பின்னர் ஆவடி பகுதி போலீசாரில் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கர்ப்பம் ஏற்பட்டதாகவும், அவர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும் கூறினார். பணிச்சுமை மற்றும் அதிகார அழுத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சோனியா, விபரீத முடிவெடுத்து உயிரிழந்தார்.

கடலூர்: காதலனின் வஞ்சனை, உயர் அதிகாரிகளின் பழிவாங்கல்.. பெண் போலீசாரின் விபரீத முடிவு
பெண் போலீசாரின் விபரீத முடிவுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 04 Jul 2025 08:50 AM

கடலூர் ஜூலை 4: சென்னை (Chennai) ஆவடி ஆயுதப்படை பெண் போலீசாக (Avadi Armed Forces Female Police Officer) பணியாற்றிய சோனியா (Soniya), காதலித்து திருமணமான முகிலனுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார். மகளை கடலூர் கடற்கரையில் சந்தித்து, பின்னர் விபரீத முடிவெடுத்தார். விஷம் குடித்ததாக கூறியபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். அவரது கடிதத்தில், ஆவடி போலீசாரில் ஒருவருடன் ஏற்பட்ட உறவினால் 3 மாத கர்ப்பம் வந்ததாகவும், அந்த போலீசார் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் பழிவாங்கும் விசாரணை, பணிச்சுமை காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, விபரீத முடிவுக்கு தூண்டியதாக சோனியாவின் கள்ளக்காதலன் ராஜீ கைது செய்யப்பட்டார்.

சோனியாவின் வாழ்க்கைப் பின்னணி

கடலூர் அருகேயுள்ள கொங்கராயனூரை சேர்ந்த சோனியா (வயது 26), சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றி வந்தார். 7 ஆண்டுகளுக்கு முன்பு, கார் டிரைவரான கீழ்கவரப்பட்டையைச் சேர்ந்த முகிலன் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயது மகள் ஒருவர் உள்ளார். பின்னர் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தை முகிலனுடன் இருந்தார்.

கடற்கரையில் சந்திப்பு – பின்னர் விபரீத முடிவு

சமீபத்தில் சோனியா தனது சொந்த ஊரான கொங்கராயனூருக்கு வந்திருந்தார். தனது மகளை பார்க்க வேண்டும் எனக் கூறி முகிலனை தொடர்பு கொண்டார். பிறகு, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சந்தித்து, மகளுடன் சிறிது நேரம் கழித்தனர். 2025 ஜூலை 1-ஆம் தேதி காலை, சோனியா முகிலனிடம் தொலைபேசியில் “நான் விஷம் குடித்துவிட்டேன்; குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

சோனியாவின் விபரீத முடிவுக்கான காரணம்

அதிர்ச்சியில் முகிலன் விரைந்து வந்து சோனியாவை மீட்டு முதலில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சையிலும் பலனின்றி சோனியா உயிரிழந்தார்.

கடிதம் மூலம் வெளிவந்த விசாரணை மற்றும் காதல் நெருக்கம்

சோனியா விபரீத முடிவெடுக்குமுன் தனது கை எழுத்தில் ஒரு கடிதத்தை எழுதி, அதை செல்போனில் படம் எடுத்து முகிலனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தார். அதில், ஆவடி பகுதியில் பணியாற்றும் ஒருபோலீஸ்காரருடன் நெருக்கமாக பழகி, 3 மாத கர்ப்பமானதாகவும், அவர் ‘கர்ப்பத்தை கலைத்து, கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றால் திருமணம் செய்கிறேன்’ என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீது உயரதிகாரிகள் ஒருதலைப்பட்ச விசாரணை நடத்தியதாகவும், பணிச்சுமையால் உடல்நிலை மோசமானதாகவும் எழுதியுள்ளார்.

வழக்கு பதிவு மற்றும் கைது

சோனியாவின் மரணத்திற்குப் பிறகு முகிலன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜீ (வயது 28) மீது விபரீத முடிவுக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம், ஒருபுறம் பெண் அதிகாரிகள் எதிர்கொள்ளும் உளவியல் துன்பங்களையும், அதிகார துறையிலேயே பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளையும் வெளிப்படுத்துகிறது.