குளு குளுவென மாறிய சென்னை.. இடி மின்னலுடன் தொடரும் கனமழை – பிரதீப் ஜான்..

Chennai Rains: சென்னையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், ஆகஸ்ட் 22, 2025 தேதியான இன்று காலை முதல் நகரின் அனேக பகுதிகளில் கனமழை பதிவாகி வருகிறது. மேலும் இன்று இரவு முழுவதும் மழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

குளு குளுவென மாறிய சென்னை.. இடி மின்னலுடன் தொடரும் கனமழை - பிரதீப் ஜான்..

கோப்பு புகைப்படம்

Published: 

22 Aug 2025 22:37 PM

சென்னை மழை, ஆகஸ்ட் 22, 2025: சென்னையில் வறண்ட வானிலை நிலவிவந்த நிலையில், ஆகஸ்ட் 22, 2025 தேதியான இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அந்த வகையில் அதிகபட்சமாக, ஒக்கியம் துரைப்பாக்கம் 12, மண்டலம் 15 ஈஞ்சம்பாக்கம் (சென்னை), மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை) தலா 11, மண்டலம் 13 அடையார் (சென்னை) 10, மண்டலம் 14 பள்ளிக்கரணை (சென்னை), மண்டலம் 15 கண்ணகி நகர் (சென்னை), மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கனமழை:

இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 22, 2025) மாலை மீண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பதிவானது. குறிப்பாக தாம்பரம், முடிச்சு, மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம், வில்லிவாக்கம், பாடி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.

காலை நேரத்தில் வடசென்னை பகுதியில் மழையின் அளவு குறைவாக இருந்த நிலையில், தற்போது அதனை ஈடு செய்யும் வகையில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தென் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ” உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள் ” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..

இரவு முழுவதும் மழை பெய்யக்கூடும் – பிரதீப் ஜான்:


மேலும் இன்று இரவும் இந்த மழை தொடரும் எனவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அதோடு, குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென்னையில் நல்ல மழை பதிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு 100 மில்லிமீட்டரை கடந்த மழை பதிவாகியுள்ளதாகவும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு முற்றுப்புள்ளி – குடியரசுத் தலைவர் ஒப்புதல் – சட்டமாகும் மசோதா

இந்த நிலையில், தமிழகப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 23, 2025 அன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.