TNPSC குரூப் 1 தேர்வு வினாத்தாளில் 32 கேள்விகள் தவறா?.. கொதிக்கும் தேர்வர்கள், கோரிக்கை வைக்கும் பயிற்சியாளர்கள்!!
TNPSC Group 1 Exam Controversy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 32 கேள்விகள் தவறாக இருப்பதாகத் தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாகத் தொடரும் இந்த தவறுகளால் பலரும் தேர்வுகளைப் புறக்கணிப்பதாகப் பயிற்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அக்டோபர், 15: தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள உயர்பதவிகளான துணை ஆட்சியர், உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்டப் பதிவாளர் மற்றும் உதவித் தொழிலாளர் ஆணையர் உள்ளிட்ட 46 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு மொத்தம் 2,23,440 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் 1,65,828 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்து தேர்வை எழுதினர். அதனைத் தொடர்ந்து, தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 7-ஆம் தேதி வெளியிட்டதுடன், வெளியிடப்பட்ட விடைகள் மீது ஏதேனும் மறுப்புகள் அல்லது கருத்துகள் இருப்பின் தேர்வர்கள் இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என அறிவித்து அதற்காக 7 நாட்கள் கால அவகாசமும் வழங்கியிருந்தது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்.. தொகுதிகள் வாரியாக கட்டமைப்பு.. நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்!!
வினாத்தாள் குளறுபடிகளால் அதிர்ச்சியில் தேர்வர்கள்:
இவ்வாறு வழங்கப்பட்ட கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வில் கேட்கப்பட்ட மொத்தம் 200 வினாக்களில் 32 கேள்விகள் வரை தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகத் தேர்வர்களும் பயிற்சி மைய நிபுணர்களும் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளில் இதுபோன்று தொடர்ச்சியாகத் தவறான முறையில் வினாக்கள் கேட்கப்படுவது வாடிக்கையாகி வருவதாகத் தேர்வுப் பயிற்சியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே, அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்வ எழுத வராத சூழல் நிலவுகிறது என்றும், தேர்வுகளில் கேள்விகளே தவறாகத்தான் கேட்கப்படும் என்ற விரக்தியான எண்ணம் மாணவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பாடப்புத்தக தவறுகளும் அதிகாரிகளின் அலட்சியமும்:
இந்த வினாத்தாள் குளறுபடிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறையின் பாடப் புத்தகங்களிலேயே சில அடிப்படைத் தகவல்கள் தவறாக இடம்பெற்றுள்ளதும் ஒரு முக்கியக் காரணமாக ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் ‘கூட்டாட்சித் தன்மை’ (Federal System of Government) முறையே இல்லை எனப் பள்ளிப் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் உண்மையில் அங்கு அத்தகைய கூட்டாட்சி முறை நடைமுறையில் உள்ளது என்றும் பயிற்சியாளர்கள் ஆதாரத்துடன் விளக்குகின்றனர். இத்தகைய கடுமையான தேர்வு முறைக் குறைபாடுகள் மற்றும் வினாத்தாள் பிழைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவரையோ அல்லது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையோ நேரில் சந்தித்துப் பேசவோ அல்லது முறையிடவோ முடியாத ஒரு துயரமான சூழலே தற்போது நிலவுகிறது. மேலும், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டாலும் தேர்வர்களுக்குத் தகுந்த மற்றும் முறையான பதில்கள் கிடைப்பதில்லை என்றும் தேர்வர்கள் தங்களது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி.. தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்..
நேரடி தலையீட்டிற்காக காத்திருக்கும் தேர்வர்கள்:
போட்டித் தேர்வுகளுக்காகத் தங்களது பல ஆண்டுகால உழைப்பையும் இளமையையும் அர்ப்பணித்துத் தயாராகும் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. தற்போதைய தேர்வு முறையில் காணப்படும் கடுமையான முரண்பாடுகளையும் முறைகேடுகளையும் களைந்து, எதிர்காலத்திலாவது இதுபோன்ற வினாத்தாள் பிழைகள் நிகழாத வண்ணம் வெளிப்படையான மற்றும் துல்லியமான தேர்வு முறையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனத் தேர்வர்களும் பயிற்சி மையப் பயிற்சியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.