வீடு தேடி அரசு சேவைகள்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

Ungaludan Stalin Scheme: வீடு தேடி அரசு திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 2025, ஜூலை 15 ஆம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

வீடு தேடி அரசு சேவைகள்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

முதலமைச்சர் ஸ்டாலின்

Published: 

06 Jul 2025 09:09 AM

சென்னை, ஜூலை 6, 2025: அரசு துறைகளில் சேவைகள், திட்டங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அடையும் வகையில் அமைக்கப்பட்டது தான் இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம், இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் 2025 ஜூலை 15ஆம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார், இதில் மிக முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விடுபட்ட பெண்கள் இதில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பத்தாயிரம் முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 15 2025 அன்று தொடங்கும் இந்த திட்டம் மூன்று மாதங்கள் அதாவது நவம்பர் 2025 ஆம் ஆண்டு வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாம்களுக்கு வரும் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த முகாமில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்:

இது தொடர்பான செய்தி குறிப்பில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் திட்டம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்புற ஊரக பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கடைக்கோடி மக்கள் வரை அரசு துறைகளில் சேவைகள் திட்டங்கள் அவரவர் வீட்டுக்கே சென்று வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஊரக நகர்புற பகுதிகளில் 10,000 முகாம்கள்:

இந்த திட்டத்திற்கு நகர்புறங்களில் 3,768 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் என பத்தாயிரம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 2025 ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடைபெறுகிறது. அதேபோல் நகர்புறங்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் அங்கு வரக்கூடிய மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம்:

இந்த முகாமில் முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இந்த முகாமில் மட்டுமே வழங்கப்படும் எனவும் இந்த முகம் மூலம் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களில் 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாம் எங்கு நடைபெறுகிறது இட விவரங்கள், அங்கு என்ன மாதிரியான அரசுத் துறை சேவைகள் வழங்கப்படுகிறது, பயனடைவதற்கான தகுதிகள் என்ன, தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல் தெரிவிக்க உள்ளனர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.