கோயில் குளத்தில் மூழ்கிய 3 பேர்.. துடிதுடித்து பலி… திருவள்ளூரில் அதிர்ச்சி!

Tiruvallur Crime News : திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் உள்ள குளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராயணம் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் தவறி விழுந்ததை அடுத்து, அவரை காப்பாற்ற இரண்டு பேர் குளத்தில் குதித்த நிலையில், மூன்று பேரும் உயிரிழந்தனர்.

கோயில் குளத்தில் மூழ்கிய 3 பேர்.. துடிதுடித்து பலி... திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் கோயில்

Updated On: 

06 May 2025 13:15 PM

திருவள்ளூர், மே 06 : திருவள்ளூரில் கோயில் குளத்தில் தவறி விழுந்து மூன்று பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் மிகவும் பழமைமை வாய்ந்தது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான வீரராகவ கோயில் அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் வெகு விமர்சையாக பூஜைகள் நடைபெறும். இந்த கோயிலில் தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசித்து செல்வார்கள். அண்மையில் கூட, இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோயில் குளத்தில் மூழ்கிய 3 பேர் பலி

அப்போது, பக்தர்கள் பெருமாளை தரிசிக்க குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த சூழலில், இக்கோயிலில் சோகமாக சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, 2025 மே 6ஆம் தேதியான இன்று வீரராகவ கோயிலில் சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக நான்கு மாணவர்கள் வந்திருக்கின்றனர்.

அப்போது, வீரராகவ கோயில் குளத்தில் சந்தியா வதனம் செய்ய நான்கு மாணவர்கள் இறங்கினர். அப்போது, படிக்கட்டில் நின்று பாரயணம் படித்துக் கொண்டிருந்தனர்.   அப்போது, திடீரென கால் இடறி ஒரு மாணவர் விழுந்துள்ளார். உயிருக்குப் போராடும் தங்கள் நண்பரைக் கண்ட இரண்டு பேரும் அவரை காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்தனர்.

இதில், மூன்று பேரும் நீரில் மூழ்கினர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோயில் அதிகாரிகளின் எச்சரிக்கையின் பேரில், திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் குளத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் கோயிலில் அதிர்ச்சி

அங்கு மருத்துவர்கள் சோதனையிட்டதில் அவர்கள் ஏற்கனவே, உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இதனை அடுத்து, திருவள்ளூர் நகர காவல்துறையினர் சடலங்களை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சேலையூரில் உள்ள அஹோபில மடத்தில் வேதம் பயின்று வரும் ஹரிஹரன் (16), வெங்கட்ரமணன் (17) மற்றும் வீரராகவன் (24) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இசர்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கூட, கன்னியாகுமரியில் கோயில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். கோயில் குளத்தில் அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட்ட இரண்டு சிறுமிகள் கைகழுவ சென்றபோது, அக்கா, தங்கை இருவரும் எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்துள்ளனர்.

இதில், இரண்டு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  இப்படி அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பெரும்பாலான கோயில்களில் குளம் மூடப்பட்டிருக்கும். திருவிழா போன்ற நேரங்களில் மட்டுமே கோயில் குளம் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.