திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து எதிரொலி.. 8 ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே!

Thiruvallur Train Fire Accident | சென்னை மணலியில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தீப்பற்றி எரிய தொடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 8 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து எதிரொலி.. 8 ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே!

கோப்பு புகைப்படம்

Updated On: 

13 Jul 2025 10:23 AM

சென்னை, ஜூலை 13 : திருவள்ளூரில் சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான (Goods Train Fire Accident) நிலையில், 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, திருப்பதி, பெங்களூரு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் 5 ரயில்கள் மாற்றும் பாதையில் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்ததால் ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தீப்பிடித்து எரிந்த ரயில்

சென்னை திருவள்ளூரை அடுத்த ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி சென்ற  தீ சரக்கு ரயில் ஒன்று விபத்துக்கு உள்ளானது. மணலியில் இருந்து புறப்பட்ட ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது சரியாக அதிகாலை 5.20 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. ரயிலில் பெட்ரோலிய பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடி தீயை அணைத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்படும் நிலையில் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

8 ரயில்களை ரத்து செய்து உத்தரவிட்ட தெற்கு ரயில்வே

திருவள்ளூரில் ரயில் தீப்பிடித்து எரிவதால் அங்கு ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் வழியாக செல்லும் எட்டு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • சென்னை சென்ட்ரலில் இருந்து காலையில் கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டெர்சிட்டி சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • சென்னை சென்ட்ரல் மைசூர் இடையே காலையில் இயக்கப்படும் வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • சென்னை – பெங்களூரு இடையே காலை இயக்கப்படும் டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • சென்னை – திருப்பதி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்த 8 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.