சென்னை மெரீனா கடற்கரையில் நாளை திருக்குறள் வார இசை நிகழ்ச்சி…பொதுமக்கள் பங்கேற்கலாம்!
Thirukkural Week Music: திருக்குறள் வாரத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் பங்கேற்கலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மெரீனா கடற்கரையில் திருக்குறள் வார இசை நிகழ்ச்சி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்று கடந்த 2024- ஆம் ஆண்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் திருக்குறள் குறளாசிரியர் மாநாடு, பொதுமக்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, அரசு அலுவலர்களுக்கான போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் இலக்கிய போட்டிகள், திருக்குறள் பட்டிமன்றம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் திருக்குறள் வாரத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 18- ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு இசையமைக்கப்பட்ட திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய பாடல்கள் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட இசையாக இசைக்கப்பட உள்ளது.
மெரீனா கடற்கரையில் நடைபெறும் திருக்குறள் இசை நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியானது, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக நாளை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சியும், 6 மணி முதல் 6:30 மணி வரை திரைப்பட நடிகை சுகாசினியின் ” என் சென்னை ” நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பொது மக்கள் உள்ளிட்டோர் இலவசமாக பங்கேற்கலாம்.
மேலும் படிக்க: பொங்கலுக்கு டாஸ்மாக் மது விற்பனை புதிய உச்சம் – 2 நாட்களில் எவ்வளவு வசூல் இத்தனை கோடியா?
திருக்குறள் வாரம் கொண்டாடப்படுவதாக முதல்வர் அறிவிப்பு
கடந்த 2024- ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அப்போது, நடைபெற்ற நிகழ்வில், பேசிய முதல்வர் மு க. ஸ்டாலின் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்குறள் வாரம் கொண்டாடப்பட்டது.
இசை நிகழ்ச்சியில் பொது மக்கள் இலவசமாக பங்கேற்கலாம்
இதே போல, இந்த ஆண்டும் ஜனவரி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) திருக்குறள் வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 23- ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு…மீனவர்களுக்கு சூறாவளிக்காற்று எச்சரிக்கை…வானிலை ஆய்வு மையம்!