அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த பகுதிகளில் ? பிரதீப் ஜான் சொன்ன தகவல்.
Tamil Nadu Weather Update: ஜனவரி 24, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜனவரி 24, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்தச் சூழலில், வரக்கூடிய அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் நல்ல மழை இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். தமிழகம்–இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் வரக்கூடிய அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
அந்த வகையில், ஜனவரி 24, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 25, 2026 தேதியான நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் மழை – பிரதீப் ஜான்:
Awesome monsoonish start in Chennai. Next 2 days we should treasure it, after which we will go into long break in rains. Rains will pickup as we go into night today and Tonight to tomorrow will be the best day for rains.
24th – Moderate rains Chennai to Delta
25th – Widespread… pic.twitter.com/I4cO0MtEQT— Tamil Nadu Weatherman (@praddy06) January 24, 2026
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை இருக்கக்கூடும் என்றும், இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு மழையிலிருந்து ஒரு இடைவெளி ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இன்று இரவு முதல் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
24ஆம் தேதியைப் பொருத்தவரையில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 25ஆம் தேதியைப் பொருத்தவரையில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். 26ஆம் தேதியைப் பொருத்தவரையில் உள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் நல்ல மழை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு மழை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.