2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Alert : 2025 மே 15ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். அதே நேரத்தில், சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, மே 15 : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. 2025 மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. தற்போது கத்திரி வெயிலின் தாக்கமும் இருக்கிறது. இதற்கிடையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அந்தமான கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை
இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 மே 15ஆம் தேதியான இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 மே 16ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 மே 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 மே 15ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 மே 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும்.
இதனால், தமிழகத்தில் ஒருசில பகுதியில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எப்போதும் மே மாத இறுதியில் தொடங்கும் நிலையில், 2025ஆம் ஆண்டு முன்கூட்டியே தொடங்கி இருக்கிறது. இந்த பருவமழை தமிழகத்தில் ஜூன் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கேரளாவில் 2025 மே 27ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.