வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 11: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 13ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் பல்வேறு இடங்களில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. அதோடு, அனல் காற்றும் இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டத்தில் வெப்பநிலை 100 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதற்கிடையில், கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்கள், டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையிலும் கூட, அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை
இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 2025 மே 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 மே 13ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 14ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
சென்னையை பொறுத்தவரை, 2025 மே 11ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 2025 மே 11ஆம் ததி 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.