தீபவாளிக்கு மக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எப்படி முன்பதிவு செய்வது? விவரம் இதோ
Special Buses For Diwali : தீபாவளிக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. புத்தாடை, பட்டாசு என மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதி வருகின்றன. தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று திங்கள் கிழமை வருகிறது. இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை சேர்த்து 3 நாள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
தீபாவளிக்கு மக்கள் பேருந்தில் ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16, 2025 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் 19 வரை சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 6,100 பேருந்துகள் என 20,372 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
இதையும் படிக்க : தீபாவளி அன்று கனமழை பெய்யுமா? வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்!
மேலும் பேசிய அவர், தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளில் செல்ல இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் மாற்றுப்பாதையிலும், தனியார் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவித்துள்ளப்ப்பட்டுள்ளது.
எங்கிருந்து பேருந்து சேவை இயக்கப்படும்?
சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகளுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்கும். அதே போல புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும். அதே போல ஆந்திரா, திருச்சி, சேலம், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து கிளம்பும் என்றார்.
இதையும் படிக்க : பிச்சு உதறபோகும் கனமழை.. அடுத்த 4 நாட்களுக்கு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்?
முன்பதிவு செய்வது எப்படி?
தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு TNSTC செயலி மற்றும் www.tnstc.in ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்யலாம்.