சூப்பர் எல்நினோ வெப்பம்.. குறையும் நிலத்தடி நீர்மட்டம்.. தமிழகத்திற்கு முக்கிய எச்சரிக்கை
Super El Nino Threat Tamil Nadu : தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சராசரி வெப்பம் பதிவாகியுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அபாயகரமாகக் குறைந்து வருகிறது. தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன், சூப்பர் எல் நினோவின் தீவிரத் தாக்கம் மற்றும் அதன் விளைவாக தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து தனியார் யூடியூப் பக்கத்துக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
சூப்பர் எல் நினோ (super el nino) குறித்து பேசிய ஹேமச்சந்திரன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், ‘தற்போது நாம் சூப்பர் எல் நினோவின் முதற்கட்ட தாக்கத்தில் உள்ளோம். இது அக்டோபர் 15 அன்று நிறைவுபெறும். அக்டோபர் 10 முதல் இரவு நேரங்களில் பனிப்பொழிவு தொடங்கி வெப்பநிலை குறையத் தொடங்கும். அக்டோபர் 20 முதல் டிசம்பர் 20 வரை இரண்டாம் கட்டத் தாக்கம் இருக்கும். இதில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால், சூப்பர் எல் நினோவின் முழுமையான மற்றும் தீவிரமான தாக்கம் 2027 ஜனவரி தொடங்கி ஜூலை வரையிலான மூன்றாம் கட்டத்தில் ஏற்படும் என்று ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார். குறிப்பாக 2027 மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை, வெப்பமான நாட்கள் மற்றும் வெப்ப அலைகளின் தீவிரம் மிகவும் அதிகமாக இருக்கும். தற்போதைய வெப்பம் என்பது வரவிருக்கும் தீவிரத்திற்கு ஒரு “ட்ரைலர்” மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய வெப்பநிலைப் பதிவுகள்
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சராசரி வெப்பநிலை 34.25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகம். இரவு நேரக் குறைந்த வெப்பநிலையும் இயல்பை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 38 நாட்கள் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம், வேலூர், சென்னை மீனம்பாக்கம், கரூர், பரமத்தி, ஈரோடு போன்ற பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த சராசரி வெப்பநிலையாகும்.
Also Read: உள்ளூர் வாசிகளுக்கு ஸ்பெஷல் ஆண்டு சுங்கச்சாவடி பாஸ்.. மத்திய அரசு அசத்தல் திட்டம்!
நீர்ப்பற்றாக்குறை
இது குறித்து தெரிவித்த ஹேமச்சந்திரன், ”இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்கள் முழுவதும் பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் 20%, கேரளாவில் 28%, கர்நாடகாவில் 31%, ஆந்திராவில் 18% மழைப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர்நிலைகளில் தற்போது 76 டிஎம்சி மட்டுமே உள்ளது. 5000க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. 35% நீர்நிலைகளில் நீர் இல்லாத வறட்சி நிலை காணப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது 29 டிஎம்சி உள்ள நீர், அடுத்த சில நாட்களில் 23 டிஎம்சி ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி சேறும், சகதியுமாகும். இது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தமிழகம் முழுவதும், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில், மிகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும். சம்பா பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி, நீர்நிலைகளை நிரப்பக்கூடும். ஆனால், மேட்டூர், பவானிசாகர், அமராவதி, முல்லைப்பெரியாறு போன்ற தென்மேற்கு பருவமழையைச் சார்ந்துள்ள பெரிய அணைகளை முழு கொள்ளளவை எட்ட வைக்கவோ அல்லது கணிசமாக நிரப்பவோ வாய்ப்பில்லை. இதனால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வறட்சி நிலை மேலும் தீவிரமடையும் என்றார்.
எதிர்கால சவால்களும் தீர்வுகளும்
2027 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் எளிதாகக் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போதே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வறட்சியும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையும், தென்னை, மஞ்சள் போன்ற பயிர்களுக்கு நீர் வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சவால்கள் ஒரு மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய உணவுப் பஞ்சம் மற்றும் வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கும் என்றும், இதை எதிர்கொள்ள பொதுமக்கள் மற்றும் அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஹேமச்சந்திரன் வலியுறுத்தினார்.