இருமல் மருந்து மரண வழக்கு – தமிழ்நாடு காரணமா? குற்றம் சுமத்தும் மத்திய அரசு?
Cough Syrup : கோல்டிரிஃப் என்ற இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு வாரியம் காரணம் என மத்திய சுகாதார அமைச்சகம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதிரி புகைப்படம்
கோல்ட்ரிஃப் (Coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தால் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 20 குழந்தைகள் மரணமடைந்த விவகாரம் நாட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மத்திய மருந்து மருந்து கட்டுப்பாடு அமைப்பு (CDSCO) ஆய்வுக்கு பிறகு கோல்ட்டிரிஃப் இருமல் மருந்தில் டைஎத்லின் கிளைசால் எனும் ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் செயலிழந்து பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பிறகு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக வட்டாரங்கள் இந்த சம்பவத்திற்கு காரணமாக தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை நேரடியாக குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 350க்கும் மேற்பட்ட விதிமீறல்கள்
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு வாரியம் தயாரித்த 26 பக்க ஆய்வு அறிக்கையில் சிரப் தயாரித்த ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் 350க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் சுகாதாரமற்ற மருந்து உற்பத்தி, பழுதடைந்த இயந்திரங்கள், மருந்து தயாரிக்க தகுதியில்லாத வேதியியல் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட கடுமையான குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : இருமல் மருந்து உயிரிழப்புகள்.. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிரடி ஆய்வு!
மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறை காரணமா?
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தாவது, ஒரு மருந்து நிறுவனம் மருந்துகளை தயாரிக்க அனுமதி பெற ஃபார்ம் 25 எனப்படும் உரிமம் தேவைப்படுகிறது. இந்த உரிமத்தை வழங்குவது மற்றும் கண்காணிப்பது மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் பொருப்பாகும் என தெரிவித்துள்ளது. மேலும் மத்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்திருந்தாலும், அதற்கான இறுதி முடிவு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் இது குறித்து காரணம் தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர், அந்த நிறுவனம் செயல்படும் தொழிற்சாலை மூடப்பட்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தராஜன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : இருமல் மருந்தால் பறிபோன 12 குழந்தைகளின் உயிர் – எப்படி எச்சரிக்கையாக இருப்பது? சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஆலோசனை
இந்த மரணங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகள் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், மரணமடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கவும், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது. உயிர் காக்க வேண்டிய மருந்து உற்பத்தியில் மனித உயிர்களை பறிக்கும் அளவுக்கு அலட்சியம் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற விபரீதங்கள் மீண்டும் நடைபெறாதவாறு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.