சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, சமூகநீதி பெயரை பயன்படுத்துவதா? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்

Anbumani Ramadoss: பள்ளி கல்லூரி விடுதிகள் சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு சமூகநீதியை படுகொலை செய்து, விடுதிகளுக்கு சமூக நீதி பெயர் வைப்பதா என கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, சமூகநீதி பெயரை பயன்படுத்துவதா? - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்

அன்புமணி - முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

07 Jul 2025 12:37 PM

சென்னை, ஜூலை 7, 2025: தமிழ்நாட்டில் அரசு தரப்பில் நடத்தப்படும் பள்ளி கல்லூரி விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார். அதாவது, சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின் – என்னவொரு முரண்? என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது.

சமூக நீதியை காக்க தவறிய அரசு:

வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?


திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகம், பிகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல் சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல், அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories
Bahujan Samaj Party: பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் புதிய கட்சிக்கு எதிராகவும் வழக்கு.. பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு..!
Edappadi Palaniswami: நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் பாஜகவுடன் கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!
Srikanth, Krishna Drug Case: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கு.. ஜாமீன் மனு தொடர்பாக நாளை தீர்ப்பு!
Minister Geetha Jeevan: தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடலா..? மறுப்பு தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன்!
30 லட்சம் ரூபாய் அபராதம்.. அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்..
Annamalai: முழுவதும் விளம்பரம்! மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.. விடுதி பெயர் மாற்றம் குறித்து அண்ணாமலை விமர்சனம்!