அன்புமணியுடன் மனக்கசப்பா? உண்மையை உடைத்த ராமதாஸ்.. என்ன விஷயம்?
PMK Ramadoss Anbumani : தனக்கு அன்புமணிக்கும் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தைலாபுர தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இந்த கருத்தை கூறியிருக்கிறார். மேலும், வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என்றும் கூறினார்.

சென்னை, மே 21 : தனக்கு அன்புமணிக்கும் (Anbumani Ramadoss) எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் (PMK Ramadoss) தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “எனக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார். கசப்பான செய்தியை என்றும் நான் சொல்வதில்லை, இனிப்பான செய்தியை தான் சொல்வேன். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கபோவதாக வதந்திகளை கிளப்பி விடுகின்றனர். அவர்கள் யார் என எனக்கு தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா? இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது. மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது” என்று பேசியிருக்கிறார்.
அன்புமணியுடன் மனக்கசப்பா?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக ராமதாஸ், அவரது மகன் அன்புமணி கட்சி தலைவராக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இரண்டு பேருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. 2024 ஆம் ஆண்டில் இளைஞரணி தலைவராக தனது மகள் வழிப்பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார்.
இது அன்புமணிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதில் இருந்தே இருவருக்கு கருத்து வேறுபாடுகள் நடந்து வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் மாதம் இனி கட்சிக்கு தானே தலைவர் என ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், இவர்களுக்கு இடையே மோதல் முற்றியது. 2025 ஏப்ரல் 11ஆம் தேதி மல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிலும் இருவரும் முகம் கொடுத்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள்வில்லை.
உண்மையை உடைத்த ராமதாஸ்
இந்த மாநாட்டில் அன்புமணி குறித்து பாராட்டி பேசாத ராமதாஸ், மாறாக கட்சிக்குள் இரு குழுக்கள் செயல்படுவது குறித்து ஆவேசமாக பேசினார். இதன் மூலம் அன்புமணியை தாக்கிய பேசியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தைலாபுரத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால், இருவருக்கு பிரச்னை நிலவி வருவதாக பேச்சுகள் அடிப்பட்டது. இந்த நிலையில் தான், தொண்டர்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக, தனக்கும் அன்புமணிக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார். இருப்பினும், அன்புமணி தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.