Tiruttani: திருத்தணி கோயிலில் குரங்குகள் அட்டகாசம்.. 5 பேரை கடித்தது!

திருத்தணி முருகன் கோயிலில், சமீபத்தில் 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதியில் வாழும் குரங்குகள், உணவு தேடி பக்தர்களை தாக்குவதாக சொல்லப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tiruttani:  திருத்தணி கோயிலில் குரங்குகள் அட்டகாசம்.. 5 பேரை கடித்தது!

திருத்தணி முருகன் கோயில்

Updated On: 

25 Aug 2025 08:45 AM

திருத்தணி, ஆகஸ்ட் 25திருத்தணி முருகன் கோயிலில் குரங்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்த நபர்களை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக திகழ்கிறது. இப்படியான நிலையில் இந்த கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனால் எப்போதும் கோயில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். அதேசமயம் வார இறுதி நாளான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் இருக்கும்.

பக்தர்களை கடித்த குரங்கு

இப்படியான நிலையில் திருத்தணி முருகன் கோயிலுக்கு தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மேனகா என்ற பெண் அங்குள்ள தீபம் ஏற்றும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மலைப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் மேனகாவை தாக்கி அவரை கடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத மேனகா அலறினார். இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

Also Read: திருத்தணி முருகன் கோயில் வழிபாடு.. எவ்வளவு பலன்கள் தெரியுமா?

இதில் மேனகாவுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளான சதீஷ் குமார், குமார் ஆகியோரையும் குரங்குகள் கடித்தன. பலத்த காயமடைந்த அவர்கள் 3 பேரும் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரை தவிர மேலும்  2 பெண்களும் குரங்கு தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த முருகன் கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு தேவஸ்தானம் மற்றும் அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேசமயம் ஷேர் ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன. ஆனால் சில பக்தர்கள் மலைக்கு படிக்கட்டுகள் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு சாமி தரிசனம்  செய்வது வழக்கம்.

Also Read: Viral Video : இதுதான் மனிதாபிமானம்.. குரங்குடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ!

இந்த பகுதியைச் சுற்றிலும் வனப்பகுதியாக இருப்பதால் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. அவை உணவுக்காக பக்தர்களிடம் நெருங்கும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதாக சொல்லப்படுகிறது. எனவே பக்தர்கள் பாதுகாப்பில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.