கள்ளக்குறிச்சியில் முதியவர்களை தாக்கி 200 சவரன் நகை கொள்ளை.. கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார்..

Kallakurichi Crime News: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வெளிநாட்டில் இருக்கும் கேசரிவர்மன் தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த திட்டமிட்டு சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரது தந்தை மற்றும் தாயை தாக்கி சுமார் 200 சவரன் நகை கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் முதியவர்களை தாக்கி 200 சவரன் நகை கொள்ளை.. கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார்..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Jul 2025 12:47 PM

குற்றச் செய்தி, ஜூலை 3, 2025: கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் கேசரி வர்மன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு 200 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் வசித்து வருபவர் கேசரிவர்மன். இவர் துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும், கேசரிவர்மன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடிபெயர்ந்து வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருட்டு நடந்தது எப்படி ?

இந்த நிலையில் தனது இரண்டாவது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக தனது சொந்த ஊரான கடுவனூர் கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர்..வரும் ஜூலை ஏழாம் தேதி அன்று தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கேசரிவர்மன் மற்றும் அவரது குடும்பத்துடன் சென்னைக்கு 2025 ஜூலை 2 ஆம் தேதி மாலை சென்றதாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, கேசரிவர்மன் தந்தை முனியன் மற்றும் தாய் பொன்னம்மாள் ஆகியோரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். பின் தனி அறையில் வைத்து மிரட்டி அவர்களை கட்டி போட்டு விட்டு பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

தீவிர விசாரணையில் காவல் துறையினர்:

அவர்கள் சென்ற பின்பு தனது மகனுக்கு தகவல் அளித்த தந்தை முனியன், தங்களை அடித்து கட்டிபோட்டு விட்டு தங்க நகைகளை எடுத்து சென்று விட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் உடனடியாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு கேசரிவர்மன் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சங்கராபுரம் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை தேடும் பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். அதிகாலையில் வயதான தம்பதிகளை அடித்து மிரட்டி கட்டி போட்டு அறையில் வைத்து பூட்டி 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.