DMK Mupperum Vizha: இன்று திமுக முப்பெரும் விழா.. களைகட்டிய கரூர் மாநகரம்!
கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். அண்ணா, பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் இணைந்து கொண்டாடப்படும் இந்த விழாவில், பல்வேறு தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கரூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திமுக முப்பெரும் விழா
கரூர், செப்டம்பர் 17: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் அந்த மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய முக்கிய நிகழ்வுகள் இணைந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் இந்தக் கொண்டாட்டம் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வெளி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் இந்த முப்பெரும் விழா விமரிசையாக இன்று (செப்டம்பர் 17) நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
இதற்காக இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்லும் அவர் பின்னர் சாலை மார்க்கமாக கரூருக்கு பயணிக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதிக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
Also Read: பசி, தூக்கம் மறந்துடுங்க.. மீண்டும் திமுக ஆட்சி.. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மாலையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் கனிமொழி எம்பிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் பொங்கல் ஊர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிக்கையாளர் பன்னீர்செல்வத்திற்கு முரசொலி செல்வம் விருதும், மறைந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட உள்ளது.
இதுபோல் பாளையங்கோட்டை நகர முன்னாள் மன்ற தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டப்பேரவை முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
Also Read: ‘இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு’ .. முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!
விழாக்கோலம் பூண்ட கரூர்
இந்த விழாவில் திமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்பெரும் விழா நடைபெறும் இடமானது கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான திமுகவினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் விழா நடைபெறும் இடத்தின் பக்கவாட்டில் தமிழக அரசின் சாதனைகள் விளக்கும் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகரம் முழுவதும் முதலமைச்சரை வரவேற்று பேனர்கள், திமுக கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நகரமே திருவிழா நடைபெறும் இடம் போல காட்சியளிக்கிறது.