குரூப் 4 தேர்வை ரத்து செய்யுங்கள்… தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Controversy over TNPSC Group 4 Exam: தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் தமிழ் பகுதி கடினமாகவும், பாடத்திட்டத்திற்கு வெளியான கேள்விகளாகவும் இருந்தது என்று தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். சீமான், இது தமிழில் படித்தவர்களை போட்டியிலிருந்து விலக்கும் சூழ்ச்சி எனக் கண்டனம் தெரிவித்தார்.

குரூப் 4 தேர்வை ரத்து செய்யுங்கள்... தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Updated On: 

16 Jul 2025 06:36 AM

சென்னை ஜூலை 16: தமிழ்நாட்டில் (Tamilnadu) நடைபெற்ற குரூப் 4 தேர்வில் (Group 4 Exam) 3,935 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து, 11 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் பாடத்திட்டத்திற்கு வெளியான கடினமான கேள்விகள் இடம்பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Naam Tamililar Katchi Seeman), இது தமிழில் படித்தவர்களை விலக்க திட்டமிட்ட முயற்சி என கண்டனம் தெரிவித்தார். ஆங்கில பகுதி எளிமையாக இருந்தது தேர்வின் சமநிலையை சீர்குலைத்ததாகவும் கூறினார். தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழகத்தில் அரசு வேலை என்பது இன்னும் பல இளைஞர்களுக்கு கனவாகவே உள்ளது. இந்தக் கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வழியாக ஆண்டுதோறும் குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளுக்கான குரூப் 4 தேர்வில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஒவ்வொரு முறையும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் குரூப் 4 தேர்வின் மூலம் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 12-ல் நடந்த குரூப் 4 தேர்வு

இந்நிலையில், கடந்த 2025 ஜூலை 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்ததிலிருந்து, 11 லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் வினாத்தாளில் பொதுத் தமிழ் பகுதிகள் மிகக் கடினமாக இருந்ததோடு, பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Also Read: மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு

மிகவும் கடினமாக இருந்த குரூப் 4 தேர்வு- சீமான் கண்டனம்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ் மொழிப் பகுதியில் மிகக் கடினமான கேள்விகள் இருந்தன; பண்டைய ஓலைச் சுவடிகள் வரை கேள்விகள் வந்துள்ளன. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கே சவாலாக இருந்த இந்த வினாக்கள், ஏனைய தேர்வர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” எனக் கூறியுள்ளார். இதன் பின்னணியில் தமிழில் படித்தவர்களை போட்டியில் இருந்து விலக்கும் நோக்கம் இருக்கலாம் என்றும், இது ‘திராவிட மாடல் அரசு’ எனும் அரசின் பிரகடனத்துடன் முரண்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் எளிமையாக இருந்ததாக தகவல்

மேலும், ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் எளிமையாக இருந்ததுடன், தமிழில் கேள்விகள் மோசமாக இருந்தது தேர்வின் சமநிலையை சீர்குலைத்துள்ளது என்றார். டிஎன்பிஎஸ்சி தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருகிறது எனக் குற்றம்சாட்டிய அவர், அரசு இத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இந்த மாதிரியான குளறுபடிகள் தவிர்க்க தமிழக அரசு கட்டாயமாக முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.