Coimbatore Rain Alert: கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
Tamilnadu Weather Update: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 44 ஜெனரேட்டர்கள், 100 ஜேசிபிக்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவை, மே 24: கோயம்புத்தூர் (Coimbatore), நீலகிரில் மாவட்டங்களுக்கு 2025 மே 25 மற்றும் 2025 மே 26ம் தேதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு 11-20 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் 3 நாட்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோயம்புத்தூரில் ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக என்னென்ன முன்னெரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அம்மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் (Pavankumar G Giriyappanavar I.A.S.) தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “முக்கிய சாலைகளில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் 44 ஜெனரேட்டர்கள், 100 ஜேசிபிக்கள், 50க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையை அடுத்த டாப்ஸ்கிப் மற்றும் வால்பாறை பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளோம். கோயம்புத்தூரை பொறுத்தவரை 75 சதவீதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனால் அதீத மழை பெய்தாலும் தண்ணீர் சரியான முறையில் வெளியேறும்.
முடிந்தவரை பவானி ஆற்றக்கரைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல், மழை நேரத்தின்போது நீர் நிலைகளில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் தங்களது வீடுகளில் தங்குவதற்கு ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் தற்காலிக மீட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மழைக்கான காரணம் என்ன..?
கேரளாவில் 2025 மே 24ம் தேதியான இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை அநேக பகுதிகளில் பெய்ய ஆரம்பமாகியுள்ளது.
2025 மே 23ம் தேதியான நேற்று தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று அதாவது 2025 மே 24ம் தேதி காலை 5.30 மணியளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 8.30 மணியளவில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், 2024 மே 24ம் தேதி நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.