சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பிரதான சுற்றுக் குழாய் திட்டம்! முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்
CM Vijay Lays Foundation For Water Project: சென்னை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அதன் புறநகர்ப் பகுதிகளின் எதிர்காலக் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை ஒருங்கிணைத்து விநியோகிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அக்டோபர் 14, 2026: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையிலும், கோடை காலங்களில் தடையின்றிக் குடிநீர் வழங்கும் நோக்கத்துடனும் செயல்படுத்தப்பட உள்ள பிரதான சுற்றுக் குழாய் திட்டத்திற்கு, சிவலிங்கநல்லூரில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சுமார் 3,108.55 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் முன்னெடுக்கிறது.
ஒன்பது குடிநீர் ஆதாரங்கள் ஒரே வளையத்தில் இணைப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்று சுற்றுக்குழாய் ஒன்றிணைக்கும் திட்டத்தின் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
#CMJosephVijay | #ChennaiWaterSupply https://t.co/hq5dxnwtMr
— Prakash Vijay (@PrakazVijay_Of) October 14, 2026
இதுவரை சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தனித்தனி குழாய்கள் மூலமாகவே நீரை விநியோகித்து வந்தன. இதனால், ஒரு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, மற்ற பகுதிகளில் உள்ள உபரி நீரை உடனடியாகப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு மாற்றுவதில் சிரமம் இருந்து வந்தது.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உட்பட மொத்தம் ஒன்பது குடிநீர் ஆதாரங்கள் ஒரே பிரதான வளையமாக இணைக்கப்பட உள்ளன.
98 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைப்பு
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை நகரைச் சுற்றிலும் சுமார் 98 கி.மீ. தொலைவுக்குத் துருப்பிடிக்காத தன்மை கொண்ட இரும்பு மற்றும் எஃகுக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் குழாய்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வளைய வடிவில் அமைக்கப்படுவதால், குடிநீரைத் தேவைக்கேற்பப் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றி விநியோகிக்க முடியும்.
மேலும் படிக்க: மழைக்கு ரெடியா மக்களே! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்?
இதன் மூலம் குடிநீர் விநியோகத்தில் சீரான அழுத்தத்தைப் பராமரிப்பதுடன், நீரின் தரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலில், மற்றொரு பகுதியில் இருந்து தேவையான நீரை மாற்றி வழங்குவதற்கும் இத்திட்டம் உதவும்.
எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டம்
சென்னை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அதன் புறநகர்ப் பகுதிகளின் எதிர்காலக் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை ஒருங்கிணைத்து விநியோகிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கான வரைபடங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அதிகாரிகளிடம் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடித்து, அடுத்த நான்கரை ஆண்டுகளுக்குள் திட்டத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..
இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னையில் குடிநீர் விநியோகத்தைத் தேவைக்கேற்பச் சீரமைக்கவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.