2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. இனி வறண்ட வானிலை தான் – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: வரக்கூடிய ஜனவரி 5, 2026 தேதியான நாளையும் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும், வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜனவரி 4, 2026: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி 4, 2026 தேதியான இன்று தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் எனவும், இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 2 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்:
இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 5, 2026 தேதியான நாளையும் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும், வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எனக்கு எதிரிகள் யாரும் இல்லை… – விஜய்யின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்?
அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து பணிமூட்டம் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி 4 தேதியான இன்று நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பணிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், கடந்த சில நாட்களாக வெப்பநிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், இரவு அல்லது அதிகாலை வேளையில் வழக்கத்தை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த மாணவனால் பரபரப்பு – என்ன நடந்தது?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடில் பதிவான 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், சேலத்தில் 32.6 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 33.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 33.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 30.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 29.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.