வடகிழக்கு பருவமழை – 5% அதிக மழை பதிவு.. வங்கக்கடலில் உருவாகும் புயல் – வானிலை மைய இயக்குனர் அமுதா தகவல்..
Tamil Nadu Weather Update: தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களை சந்திப்பின் போது, “ கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% அதிகம் பதிவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் குறைந்த மழைப்பொழிவு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், நவம்பர் 24, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில், இயல்பை விட ஐந்து சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும், மேலும் 48 மணி நேரத்தில் அதே திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள்:
இது ஒரு பக்கம் இருக்க, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டலக் கீழ் சுழற்சி நாளை, அதாவது நவம்பர் 25, 2025, குமரி கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழ் சுழற்சி நவம்பர் 24, 2025 இன்று கூட அதே பகுதியில் தொடர்கிறது. இந்த மூன்று சுழற்சிகளும் இந்திய கடலோரப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவி வருகின்றன.
மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..
வடகிழக்கு பருவமழை – 5% அதிக மழை பதிவு:
இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% அதிகம் பதிவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் குறைந்த மழைப்பொழிவு உள்ளது. இந்திய கடல் பகுதிகளில் நிலவும் அந்தமான், குமரி கடல், அரபிக்கடல் பகுதிகளின் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
வங்கக்கடலில் உருவாகும் புயல்:
அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது நவம்பர் 26, 2025 அன்று தெற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.
மேலும் படிக்க: 6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்.. கால நீடிப்பு கிடையாது – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்..
இந்த சூழலில் டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும். நவம்பர் 25, 2025 நாளும் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மட்டும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24 முதல் 26 வரை சூறாவளிக் காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இடங்களில் அதிக கனமழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.