தீபாவளி சீட்டு: ‘தங்கக் காசு’ தருவதாக ரூ.8 கோடி மோசடி.. சென்னை தம்பதி அதிரடி கைது!!
Diwali Chit fund: சென்னையை சேர்ந்த தம்பதி தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தீபாவளி முடிந்து 3 வாரங்கள் ஆன நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் தற்போது வந்த வண்ணம் உள்ளன.

மோசடி தம்பதி
சென்னை, நவம்பர் 13: சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சீட்டுப் பணம் வசூலித்து மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோசடிகள் பல விதம் அதில் இதுவும் ஒரு விதம் என்பது போல் தான் இந்த சீட்டு மோசடி தமிழகத்தில் நடந்து வருகிறது. இதுபோன்று வீட்டில் வைத்தே சீட்டு பணம் வசூலிப்பவர்களுக்கென எந்த ஒரு சட்டரீதியான கட்டுபாடும் கிடையாது என்பதால், எங்கு யார் என்ன மோசடியில் ஈடுபடுகிறார் என்பது மோசடி அரங்கேறிய பின்பு தான் வெளியே வருகிறது. மக்களுக்கு போலீசாரும், ஊடகங்களும் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், தொடர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஏமாற்றுபவர்கள் புதிது புதிதாக யோசித்து வலை விரிக்க, ஏமாறுபவர்கள் எளிதாக அவர்கள் வலையில் சிக்கிக்கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் தற்போது நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : கோயிலுக்குள் வைத்து இரண்டு முதியவர்கள் வெட்டிக்கொலை.. உண்டியலை திருட வந்தவர்கள் செய்த கொடூரம்!
ஒவ்வொருவருக்கும் 2 கிராம் தங்கக் காசு:
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சீட்டுப் பணம் வசூலித்து வந்துள்ளனர். இதில், சரியான கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்ட அந்த தம்பதியினர், அப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், தீபாவளியை மனதில் வைத்து தீபாவளி சீட்டு தொடங்கியுள்ளனர். அதோடு, மக்களை தங்கள் வலையில் இழுக்க, ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று கண்கவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனை நம்பிய பொதுமக்கள் தீபாவளிக்கு மொத்தமாக பலகாரங்கள் வாங்குவதே திண்டாட்டமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் 2 கிராம் தங்கம் கிடைப்பதை எண்ணி பேராசை கொண்டுள்ளனர். உடனே, இந்த தீபாவளி சீட்டில் முண்டியடித்துக் கொண்டு ஏராளமானோர் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து, 2 கிராம் தங்கத்தினையும், தற்போது தங்கம் விற்கும் விலையையும் எண்ணி தங்ககளுக்கு பெரும் லாபம் கிடைக்க உள்ளதாக எண்ணி, மாதம் மாதம் தங்களது தவனைத் தொகையை சரியாக செலுத்தி வந்துள்ளனர்.
மொத்தமாக ரூ.8 கோடி மோசடி:
இந்தநிலையில், கடந்த மாதம் (அக்.20) தீபாவளியும் வந்தது. இதையொட்டி, சீட்டு பணம் செலுத்தியவர்கள், தங்களது பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால், இல்லை என்று மறுக்காமல் இப்போது தருகிறோம், அப்போது தருகிறோம் என தம்பதியினர் இழுத்து அடித்துள்ளனர். எனினும், தற்போது வரை அவர்கள் சீட்டு கட்டிய யாருக்கும் பணம், தங்கம் என எதையும் திருப்பி தரவில்லை எனத் தெரிகிறது.
இதன் பின்னரே, சத்தியசீலன்-சித்ரா தம்பதி சொன்னபடி தங்க காசு தராமல் ரூ.8 கோடி பணத்தை அப்பகுதி மக்களிடம் இருந்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சத்தியசீலன்-சித்ரா தம்பதியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : பெண்ணின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே செல்ல முயன்ற நபர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
அதோடு, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அழைப்பு விடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், போலியான சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.