10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்.. சுவாரஸ்ய சம்பவம்!
70-Year-Old man Passes 10th Board Exams in Cuddalore | தமிழகத்தில் இன்று (மே 16, 2025) 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில், 70 வயது முதியவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். முதியவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடலூர், மே 16 : தமிழகத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் (10th Board Exam Result) இன்று ( மே 16, 2025) வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்வில் 70 வயது முதியவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 6 ஆம் வகுப்பு படிக்கும்போதே படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில், தான் எப்படியாவது படிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து சாதித்துள்ளார். தனது 70வது வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதன் மூலம் படிப்புக்கு வயது தடையில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார். இந்த நிலையில், யார் இந்த முதியவர் அவர் 70வது வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மே 9, 2025 அன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து இன்று (மே 16, 2025) 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 8,71,239 பேர் தேர்வு எழுதிய நிலையில், அதில் மொத்தம் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,17,183 மாணவிகளும், 4,00,078 மாணவர்களும் ஆவர். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் 2.25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வாழ்த்துகளோடு 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டோம்.
மாணவச் செல்வங்கள் தேர்வு முடிவுகளை
🔗 https://t.co/r7JJmFiTeA,
🔗 https://t.co/GdKMMXBpbh… pic.twitter.com/yakiFo48f9— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 16, 2025
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டியை சேர்ந்தவர் கோதண்டராமன். 70 வயதாகும் இவர், 1967-ல் 6 வகுப்பு படிக்கும்போதே படிப்பை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். அந்த தேர்வில் அவர் தோல்வியடைந்த நிலையில் , தற்போது 3வது முறையாக 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதாவது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 299 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கிராம் இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரின் இந்த முன்னெடுப்பு வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.