Mohammed Shami Retirement: ஓய்வு என தீயாய் பரவிய செய்தி! முகமது ஷமி கொடுத்த நெருப்பான பதில்..!
Shami Retirement Rumors: ரோஹித், கோலிக்குப் பின் முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு ஷமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ளார். அவர் வதந்தியை பொய்யென மறுத்துள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ஷமி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது ஷமி
ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) விராட் கோலியும் (Virat Kohli) வெறும் 5 நாட்கள் இடைவெளியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து, தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் (Mohammed Shami) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில், இது உண்மையா இல்லையா என்பது குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே பதிலளித்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முகமது ஷமி ஓய்வு பெற்றுவிட்டாரா?
Instagram story of Mohammed Shami. ⚠️ pic.twitter.com/CEFlCpHxUh
— Johns. (@CricCrazyJohns) May 13, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் இரு பெரும் தூண்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்குப் பிறகு , முகமது ஷமியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்தி கடந்த சில மணிநேரமாக சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தேர்வாளர்கள் நீக்கியதாகவும், இதனால் இத்தகைய முடிவை முகமது ஷமி எடுத்ததாகவும் கூறப்பட்டது. தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்த முகமது ஷமி, தனது ஓய்வு குறித்த அனைத்து வதந்திகளும் பொய் என நிரூபித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “சபாஷ் மஹாராஜ்! உங்களை பற்றி நீங்கள் கவலைப்பட்டு கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எங்களை கவனித்துக் கொள்ளலாம். நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேனா இல்லையா என்பது பின்னர் தெரியும். உங்களைப் போன்றவர்கள் எங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிவிட்டார்கள். ஏதாவது நல்லது இருந்தால் வெளியே சொல்லுங்கள், இன்றைய நாளின் மிகவும் மோசமான செய்தி இதுதான். மன்னிக்கவும்” என்று தெரிவித்திருந்தார்.
காயத்தால் அவதிப்பட்ட முகமது ஷமி:
2023 ஒருநாள் உலகக் கோப்பையின் போது முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டாலும், இந்திய அணி இறுதிப்போட்டி வரை செல்ல உதவி செய்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த கையோடு சிகிச்சை எடுத்து கொண்ட முகமது ஷமி, கிட்டத்தட்ட 1 வருடம் இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு, காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இவரது சிறப்பான பங்களிப்புதான் இந்திய கிரிக்கெட் அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவியது. தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது ஷமியின் இந்திய அணியின் மிக முக்கியமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கப் போகிறார். அவரது அனுபவம் அணிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முகமது ஷமி இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.