Royal Challengers Bengaluru: இது நடந்தால் நான் இந்தியா வருவேன்… விராட் கோலிக்கு ஆதரவாக ஏபி டிவில்லியர்ஸ் குரல்..!
IPL 2025 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றால் இந்தியாவுக்கு வந்து ஸ்டேடியத்தில் இருப்பேன் என முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் விராட் கோலியுடன் கோப்பையை உயர்த்த விரும்புவதாகவும், பல ஆண்டுகளாக இந்த கனவை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். RCB அணி பிளே ஆஃப்களில் இடம் பிடிக்க இன்னும் ஒரு வெற்றி தேவையாக உள்ளது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆர்சிபி அணி பிளே ஆஃப்களில் தங்கள் இடத்தை பிடிக்க இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது. அதன்படி, முதல் முறையாக ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இன்று அதாவது 2025 மே 17ம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியை வீழ்த்தினால் பிளே ஆஃப்க்குள் தகுதிபெற்று அசத்தும். இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
யார் அந்த வீரர் என்ன சொன்னார்..?
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜாம்பவானுமான ஏபி டிவில்லியர்ஸ், ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியால் இதை செய்வேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என் வார்த்தைகளை கவனியுங்கள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிப் போட்டிக்கு முன்னேறினால், இந்தியாவிற்கு வந்து ஸ்டேடியத்தில் இருப்பேன். அப்போது, விராட் கோலியுடன் அந்த கோப்பையை உயர்த்துவதை விட வேறு எதுவும் எனக்கு மகிழ்ழ்சியை தராது. நான் பல ஆண்டுகளாக அதை செய்ய முயற்சித்து வருகிறேன்” என்று டிவில்லியர்ஸ் இன்ஸ்டாகிராம் லைவில் தெரிவித்தார்.
ஏபி டிவில்லியர்ஸ்:
ஐபிஎல் வரலாற்றில் ஏபி வில்லியர்ஸ் 13 வருடம் விளையாடியுள்ளார். அதிலும், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 2 அணிகளுக்காக மட்டுமே விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 39.70 சராசரியில், 151.68 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 சதங்கள், 40 அரைசதங்களுடன் 5,162 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் 2011ம் ஆண்டு முதல் 2021 வரை கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலியுடன் சேர்ந்து கோப்பையை வெல்ல பல முறை முயற்சி செய்தார். ஆனால், இந்த கனவு இன்றுவரை வெறும் கனவாகவே உள்ளது.
ஐபிஎல் 2025 பிளே ஆஃப்கள் எப்போது..?
ஐபிஎல் பிளே ஆஃப்கள் வருகின்ற 2025 மே 29ம் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி, குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று வருகின்ற 2025 மே 29 மற்றும் மே 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதேநேரத்தில், ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி 2025 ஜூன் 3ம் தேதி நடைபெறுகிறது. இருப்பினும், பிளே ஆஃப்களுக்கான இடங்கள் எங்கு நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணி எப்படி செயல்பட்டது..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லீக் ஸ்டேஜில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 3 போட்டிகள் உள்ளது. அதன்படி, இன்று அதாவது 2025 மே 17ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராகவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.