IPL 2025 Playoffs Scenario: பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! எந்தெந்த அணிகள் எதை செய்தால் உள்ளே வரும்..?
IPL Team Standings: ஐபிஎல் 2025 சீசனில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளேஆஃப்பில் இருந்து வெளியேறியுள்ளன. மீதமுள்ள 8 அணிகளின் பிளேஆஃப் தகுதிக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. பெங்களூரு முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மும்பை, குஜராத், டெல்லி, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதால், ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தக் கட்டுரை அனைத்து அணிகளின் பிளேஆஃப் தகுதி சமன்பாடுகளை விரிவாக விளக்குகிறது.

ஐபிஎல் 2025 சீசனில் (IPL 2025) இதுவரை 54 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதன்பிறகு, ஐபிஎல்லில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் பிளேஆஃப் சுற்றுக்கு முக்கியமானது. ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை எம்.எஸ்.தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறியுள்ளன. அதே நேரத்தில் ஐபிஎல்லில் மீதமுள்ள 8 அணிகளுக்கு இடையே பிளே ஆஃப் செல்வதற்கான கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தநிலையில், ஐபிஎல் 2025 சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தவிர, மீதமுள்ள 8 அணிகள் பிளேஆஃப் செல்வதற்கான அனைத்து சமன்பாடுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
நேற்று அதாவது 2025 மே 4ம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளுக்கு பிறகு, பிளேஆஃப்களுக்கான போர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது, முதல் போட்டியில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணி முதலிடம்:
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025ல் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், பெங்களூரு அணியால் இன்னும் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப்பில் முதல் அணியாக தகுதி பெறும். அதேநேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அவர்கள் 17 புள்ளிகளை எட்டி, பிளேஆஃப் செல்வார்கள். ஆனால் தற்போது 18 புள்ளிகளை எட்டக்கூடிய 5 அணிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், பஞ்சாப் அணி 3 போட்டிகளில் 2 ல் வெற்றி பெற வேண்டும்.
MI, GT, DC இடையே கடுமையான போட்டி:
மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி பிளே ஆஃப்க்கு செல்ல வேண்டுமென்றால், 3 போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதேபோல், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும்.
டெல்லி கேபிடல்ஸ் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, அந்த அணி மீது அழுத்தம் உள்ளது. ஐபிஎல் 2025ல் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இதுப்போன்ற சூழ்நிலையில், மீதமுள்ள 4 போட்டிகளிலும் மூன்று போட்டிகளில் வென்றாலும், பிளேஆஃப்களை எட்ட முடியும்.
பிளே ஆஃப் பந்தயத்தில் தவழும் கொல்கத்தா, லக்னோ:
நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆஃப் செல்லும் பாதையை கொல்கத்தா அணி தக்கவைத்து கொண்டது. இதுவரை கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. பிளே ஆஃப்க்கு செல்ல வேண்டுமென்றால் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்று 17 புள்ளிகளை பெற்றால், பிளே ஆஃப் தகுதிபெற வாய்ப்புள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வி பெற்று, புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி, 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இருப்பினும், பிளேஆஃப்களுக்குள் லக்னோ அணி நுழைய, மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.
ஹைதராபாத் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளதா..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. அனைத்திலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். இன்று (2025 மே 5) டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்தால் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிவிடும். அதேநேரத்தில், எல்லாப் போட்டிகளிலும் வென்ற பிறகும், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து காத்திருக்க வேண்டும்.