கிரெடிட் கார்டு வாங்கப்போறீங்களா? சிறந்த கார்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
Best Credit Card Tips : கிரெடிட் கார்டுகள் இன்று நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன. ஷாப்பிங், பயணம் உள்ளிட்ட பல தேவைகளுக்கு இந்தியர்கள் அதிகமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மார்கெட்டில் உள்ள ஏராளமான கிரெடிட் கார்டுகளில் சரியான கார்டை தேர்வு செய்வது சிக்கலானதாக இருக்கலாம். இந்த கட்டுரையில், வட்டி விகிதம், வருடாந்திர கட்டணம், ரிவார்ட்ஸ், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் அடிப்படையில் சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி என பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் கிரெடிட் கார்டு (Credit Card) வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் நிறைந்துள்ள இந்தியாவில் ஷாப்பிங், பயணம், ஆன்லைன் (Online) கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கு கிரெடிட் கார்டுகள் அதிகம் கைகொடுத்து வருகிறது. குறிப்பாக ரிவார்ட்ஸ், கேஷ்பேக், தள்ளுபடி போன்றவை கிரெடிட் கார்டுகள் வழங்குவதால் அதனை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் அது நம் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்யும். ஆனால் மார்கெட்டில் நூற்றுக்கணக்கான கிரெடிட் கார்டுகள் உள்ளதால், உங்களுக்கு பொருத்தமான சிறந்த ஒன்றை தேர்வு செய்வது சற்று கடினமானதாக இருக்கும். எனவே, ஒரு கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
- முதலில், உங்கள் மாதச் செலவுகள் குறித்து கணக்கிட வேண்டும். மளிகை, கேஸ், மின் கட்டணம் போன்ற வீட்டு செலவுகள் மற்றும் உணவகம், ஷாப்பிங், பயணம் போன்றவற்றை ஆராய்ந்து, அதில் அவசியமற்ற செலவுகளை திட்டமிட வேண்டும். இதனைடுத்து, அந்த வகை செலவுகளுக்கு அதிக கேஷ்பேக், ரிவார்ட்ஸ், தரும் கார்டுகளைத் தேர்வு செய்யலாம்.
- ஒவ்வொரு கார்டுக்கும் வருடாந்திர கட்டணம் (Annual Fees), வட்டி விகிதம் (Interest Rate), தாமத கட்டணம் (Late Fees) போன்றவை உள்ளன. சில ப்ரீமியம் கார்டுகளுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை கட்டணங்கள் இருக்கலாம். இந்த கட்டணங்களை ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் மூலம் மீட்டெடுக்க முடியும். ஆகவே, செலவுக்கு ஏற்ப நீங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் பெறும் பயன்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
- சில கார்டுகள் ஏர்போர்ட் லவுஞ்ச் அக்சஸ் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்குகின்றன. இது உங்களது லைப் ஸ்டைலுக்கு பொருத்தமானதா என்பதைப் பொறுத்து முடிவு செய்யுங்கள்.
- ரெஸ்டாரண்ட்களில் கேஷ்பேக், டிராவல் டிக்கெட்களுக்கு ரிவார்ட்ஸ், ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பாயிண்ட்ஸ்கள், ஸ்மார்ட்போன்களுக்கு இஎம்ஐ ஆஃபர்கள் ஆகியவை கிடைக்கும். அதற்கான விதிமுறைகள் மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொண்டு தேர்வு செய்யுங்கள்.
- இப்போது பெரும்பாலான வங்கிகள் ஆன்லைன் வாயிலாக KYC முறையில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கின்றன. பான் எண், மொபைல் எண் போன்ற விவரங்களை எளிதாக பதிவிட முடியும்.
- ஒவ்வொரு கார்டுக்கும் வயது, வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்ற தகுதிகள் இருக்கின்றன. உங்கள் விவரங்கள் அதற்கேற்ப உள்ளதா என்பதை முதலில் சரிபாருங்கள். அதற்கேற்ப சரியான கிரெடிட் கார்டுகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
- சில நேரங்களில் தேவையில்லாமல் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். கார்டு தொலைந்துவிட்டால் அதனை உடனடியாக பிளாக் செய்ய வேண்டி வரலாம். அப்போது, 24×7 வாடிக்கையாளர் சேவை வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.