Astrology: ராகு – கேது பெயர்ச்சி எப்போது? – கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
2025 மே 18 அன்று ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ராசிகளுக்கு எதிர்மறை தாக்கம் ஏற்படலாம். பண இழப்பு, உறவுகளில் பிரச்சினைகள், வேலை தொடர்பான சவால்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடத்தை பொறுத்தவரை இந்த உலகமும், அங்கு வாழும் மக்களும் இயங்க 9 கிரகங்களின் செயல்பாடுகள் மிக முக்கியம் என சொல்லப்பட்டு உள்ளது. இவை 12 ராசிகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாக்குகிறது. அது ஏற்றமாகவும் இருக்கலாம், இறக்கமாகவும் இருக்கலாம். இப்படியான நிலையில் இவற்றில் சில கிரகங்களின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். அந்த வகையில் சனி மற்றும் செவ்வாயை விட ஆபத்தான கிரகமாகன ராகு பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு – கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. அப்போது ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம்பெயரப் போகிறார்.
ஜோதிடத்தின் படி, ராகு ஒரு நிழல் கிரகமாகும். அவர் கும்ப ராசியில் அதிக பலம் கொண்டவராக திகழ்வார். எனவே 2025 ஆண்டு சில ராசிக்காரர்கள் ராகுவிடம் எவ்வளவு கவனமாக இருக்கிறாரோ, அந்தளவு நல்லது என சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சந்திக்கும் எதிர்மறை நிகழ்வுகள் மற்றும் என்ன மாதிரியான பரிகாரங்களைப் பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
- கடகம்: இந்த ராசியின் எட்டாவது வீட்டில் ராகு நுழைவதால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பாதி வீணாகிவிடும் சூழல் உண்டாகும். நீங்கள் நம்புபவர்களால் அதிகம் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வழியில் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் உடன்பிறந்தவர்கள் சொத்துக்களுக்காக உங்களை ஏமாற்றக்கூடும். மேலதிகாரிகளால் வேலையில் பிரச்சினைகள் ஏற்படலாம். திருமணம் மற்றும் புதிய வேலை முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
- சிம்மம்: இந்த ராசியின் ஏழாவது வீட்டில் ராகு சஞ்சரிப்பதால், வாழ்க்கைத் துணைக்கு அடிக்கடி நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. போதை பழக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற தொடர்புகள் உண்டாகலாம். அதிகாரிகள் எப்போதும் உங்கள் வேலை சுமையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சில சிரமங்களை சந்திக்கலாம். திருமண முயற்சிகளில் சிக்கல் உண்டாகலாம். குடும்ப வாழ்க்கையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எழலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
- துலாம்: இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால், சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேலையில் அதிகாரிகள் உங்களை குறைத்து மதிப்பீடுவார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவமும் குறையும். கடந்த காலத்தில் உங்களிடமிருந்து உதவி பெற்றவர்கள் கைவிரிப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்வார்கள். நம்புபவர்களால் ஏமாற்றப்படுவீர்கள். குழந்தைகளால் பிரச்சினைகள் எழும்.
- விருச்சிகம்: இந்த ராசியின் நான்காவது வீட்டில் ராகு நுழைவதால், சனியின் பலன்களை ஓரளவு அனுபவிப்பீர்கள். அதிக முயற்சி எடுத்தும் குறைவான பலன் தான் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையலாம். குழந்தைகள் படிப்பில் ஆர்வத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அம்மாவின் உடல் நலனில் கவனம் தேவை. வேலையின் முக்கியத்துவம் குறையும். பிரச்சனைகளும் பதட்டங்களும் அதிகரிக்கும்.
- மகரம்: பணத்தின் இடத்தில் ராகுவின் சஞ்சலம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க நேரிடும். உறவினர்களும் நண்பர்களும் உங்கள் பணத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். ஆனால் ஒருபோதும் உதவ மாட்டார்கள். பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். முக்கியமான சுப நிகழ்வுகள் கூட தள்ளிப்போகும்.
- மீனம்: செலவு செய்யும் இடத்தில் ராகுவின் சஞ்சலம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பிலிருந்து விரும்பிய பலன்களைப் பெறாமல் போகலாம். கடின உழைப்பின் பெரும்பகுதி வீணாகலாம். மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களால் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எங்கு பணத்தை முதலீடு செய்தாலும், நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொடுக்கப்பட வேண்டிய பணத்தின் மீது நிறைய அழுத்தம் உண்டாகும். உங்கள் தொழில், வேலைகளில் புதிய எதிரிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
ராகு சாதகமாக இல்லாத இந்த 6 ராசிக்காரர்களும், தினமும் காலையில் சுப்ரமணிய அஷ்டகம் அல்லது ஸ்கந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது நல்லது. முடிந்தவரை முருகன் அல்லது விநாயகர் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதும் மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது.
(இந்த தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அறிவியல் விளக்கமும் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)